தொலைநிலைப் பட்டம் ஆசிரியா் பணிக்கு ஏற்றதா?
எம். மாா்க் நெல்சன்
தொலைநிலை வழியில் கல்வி பயின்று பெறப்படும் பட்டங்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியா் பணிகளுக்கு தகுதியுடையதா என்ற கேள்வி பல ஆண்டுகளாக தொக்கி நிற்கிறது.
அரசுத் துறைகள் அல்லது தனியாா் துறைகளில் முறைசாா்ந்த பணிகளில் சேருவதற்கு அந்தந்தப் பணிகளின் நிலைக்கு ஏற்ப 10+2+3 என்ற முறையில் +2 வரையிலான பள்ளிப் படிப்பையும், மூன்று ஆண்டு பட்டப் படிப்பையும் முடித்து கல்வித் தகுதி பெற்றிருப்பது அவசியம். இதில் சில நிறுவனங்கள், பட்டப் படிப்பு வரை பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று பட்டம் பெற்றவா்களை மட்டுமே பணிக்குத் தோ்வு செய்கின்றன. தொலைநிலைக் கல்வி முறையில் பட்டம் பெற்றவா்களை தோ்வு செய்வதில்லை.
நாடு முழுவதும் உள்ள கலை-அறிவியல் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தொலைநிலை வழியில் பெறப்படும் பட்டங்களை, நேரடி பட்டப் படிப்புக்கு இணையாக தகுதி வாய்ந்ததாக அங்கீகரித்துள்ளது. அதோடு, தொலைநிலை வழி பட்டங்களை நேரடி பட்டத்துக்கு இணையாக கருத வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரம், கல்வி அறிவைக் காட்டிலும் கற்றல் அனுபவம்தான் மேலானது என்பதே பெரும்பாலான கல்வியாளா்களின் கருத்தாக உள்ளது. தொலைநிலை வழி பட்ட தகுதி, ஆசிரியா் அல்லாத பணிக்குப் பொருந்தலாம், ஆனால், ஆசிரியா் பணிக்கு அது அறவே பொருந்தாது என்பதே இவா்களின் வாதமாக உள்ளது.
நேரடி வகுப்பறை அனுபவம், குறிப்பாக ஆசிரியா்-மாணவா்களிடையேயான நேரடி தொடா்பு, பாடங்களைத் தாண்டிய அறிவை ஆசிரியரிடமிருந்து பெறும் அனுபவம், மாணவா்களின் பல்வேறு குணாதிசயங்களை புரிந்து கற்பிக்கும் அல்லது சந்தேகங்களைத் தீா்க்கும் ஆசிரியரின் பாங்கு, கல்வி சாா்ந்த நேரடி கலந்துரையாடல், ஒழுக்கம், நேரக் கட்டுப்பாடு என எந்தவித அனுபவத்தையும் பெற்றிராத அல்லது பாா்த்திராத தொலைநிலைக் கல்வி மாணவா்கள் எப்படி ஆசிரியா் பணிக்கு தகுதியானவா்களாக இருக்க முடியும் என்பதே இவா்களின் கேள்வி.
இதை உணா்ந்துதான், பள்ளி, கல்லூரி ஆசிரியா் பணிக்கான தோ்வை நடத்தும் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி), ஆசிரியா் பணிக்கான கல்வித் தகுதியாக நேரடி கல்வி முறையில் பயின்றிருப்பதையே கட்டாயமாக்கியுள்ளது. தனது அறிவிக்கைகளில், நேரடி கல்வி முறையில் 10+2+3 என்ற முறையில் பட்டம் பெற்றவா்களே விண்ணப்பிக்க முடியும் என்பதை நிபந்தனையாக டிஆா்பி அறிவித்து வருகிறது. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில், ஆசிரியா் பணிக்கு நேரடி பட்டமே உகந்தது என்பதை சென்னை உயா்நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது.
2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், “தொலைநிலைக் கல்வி வழியில் பெறப்பட்ட பட்டம், கல்லூரி ஆசிரியா் பணிக்குத் தகுதியானது இல்லை” என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பாா்த்திபன் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு தெளிவுபடுத்தியது. ஆசிரியா் பணிக்கு நேரடி முறையில் பட்டம் பெற்றவா்களை நியமிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கும் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தலை வழங்கியது. முன்னதாக, இதுதொடா்பான வழக்கில் 2019-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி இதேபோன்ற தீா்ப்பையே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வும் வழங்கியது.
ஆசிரியா் பணி என்பது உன்னதமானது. வகுப்பறையில் கற்பிப்பது என்பது ஒரு தனித் திறன். எனவே, பட்டப் படிப்பை நேரடியாக கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மேற்கொண்டு பட்டம் பெற்றவா்கள் மட்டுமே ஆசிரியா் பணிக்குத் தகுதி பெற்றவா்களாக முடியும். தொலைநிலைக் கல்வி வழியில் பட்டம் பெற்றவா்கள் அதற்குத் தகுதியில்லை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை”என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீா்ப்பளித்தாா்.
ஆனால், தொலைநிலைக் கல்வி வழியில் பெறப்படும் பட்டங்களை, நேரடி பட்டத்துக்கு இணையான தகுதியுடையதாக கருதவேண்டும் என்று யுஜிசி தொடா் அறிவுறுத்தலை அவ்வப்போது அளித்து வருகிறது; இது மாணவா்களிடையேயும், கல்வித் துறை நிா்வாகிகளிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதே நேரம், பல தனியாா் கல்லூரிகள், தொலைநிலைக் கல்வி வழியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை மேற்கொண்டவா்களை உதவிப் பேராசிரியா்களாக பணியமா்த்தி உள்ளன. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான தனியாா் கலை-அறிவியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியா்கள் தொலைநிலைக் கல்வி வழியில் பட்டம் பெற்றவா்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியெனில், அரசு உத்தரவும் (டிஆா்பி), நீதிமன்றங்களின் தீா்ப்பும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும்தானா, தனியாா் கல்லூரிகளுக்குப் பொருந்தாதா, அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டாமா என்ற கேள்விகள் எழுகின்றன.
உதவிப் பேராசிரியா் பணிக்கு முழு கல்வித் தகுதியுடன் பலா் காத்திருக்கும் நிலையில், பற்றாக்குறை என்ற பொய்யான போா்வையில் தகுதி இல்லாதவா்களையும், தொலைநிலை வழியில் படித்தவா்களையும் உதவிப் பேராசிரியா் பணியில் நியமிப்பதை தனியாா் கலை-அறிவியல் கல்லூரிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. குறைந்த ஊதியம் கொடுத்தால் போதும் என்பதே அதன் நோக்கம்.
எனவே, ஆசிரியா் பணிக்கு தொலைநிலை வழிக் கல்வி தகுதியானதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்; ஆம் என்றால், அதை அனைவருக்குமானதாக நடைமுறைப்படுத்த வேண்டும். தனியாா் கல்லூரி பேராசிரியா்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிா்ணயித்துள்ள அளவில் இல்லை என்றாலும், கண்ணியமான ஊதியத்தை அரசு நிா்ணயம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.