நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. 'டிரெயின்’ படத்தின் ’சிறப்பு விடியோ’ வெளியீடு!
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜன.16) அவர் நடித்து வரும் இயக்குநர் மிஷ்கினின் “டிரெயின்” திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் மிஷ்கின் சமீப காலமாக நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அவரது இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் ‘டிரெயின்’ திரைப்படம் உருவாகி வருகின்றது.
பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவின் ’வி க்ரியேஷ்ன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகை ஸ்ருதி ஹாசன், நரேன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பௌசியா பாத்திமாவின் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் படத்தொகுப்பை ஸ்ரீவத் கையாள்கிறார்.
இதையும் படிக்க: நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் 47வது பிறந்தநாளான இன்று (ஜன.16) இந்த திரைப்படத்தின் ’சிறப்பு க்ளிம்ஸ்’ விடியோ படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விடியோவில் ரயில் ஒன்றில் அவர் நடந்து செல்வதும், பின்னர் படத்தின் டப்பிங் பணியின் போது அவர் உணர்ச்சிப்பூர்வமாக வசனங்கள் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அந்த விடியோ நிறைவடைகிறது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இயக்குநர் மிஷ்கினோடு அவர் இணைந்திருப்பது இருவரது ரசிகர்களுக்கும் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.