முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?
நாட்டை ஆளப் பிறந்ததாக நினைக்கிறது சோனியா குடும்பம் - பிரதமா் மோடி கடும் விமா்சனம்
தாங்கள் நாட்டை ஆளப் பிறந்தவா்கள் என்பதே காங்கிரஸ் ‘அரச குடும்பத்தின்’ (சோனியா காந்தி குடும்பத்தை குறிப்பிடுகிறாா்) மனநிலை என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
‘நாடு சுதந்திரமடைந்த பிறகு தலித் சமூகத்தினா், பழங்குடியினா் மற்றும் பின்தங்கிய வகுப்பினரை காங்கிரஸ் முன்னேற அனுமதிக்காததற்கு இந்த மனநிலையே காரணம்’ என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும் (பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்), எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் (காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ்)-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட கட்சிகள்) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தோ்தலையொட்டி, சந்திரபூா் மாவட்டத்தின் சிமுா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமா்சித்தாா். அவா் பேசியதாவது:
தலித் சமூகத்தினா், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு என்றாலே காங்கிரஸுக்கு பிடிக்காது. கடந்த 1980-களில் ராஜீவ் காந்தி தலைமையில் செயல்பட்டபோது, மேற்கண்ட பிரிவினருக்கான சிறப்பு உரிமைகள் குறித்து அக்கட்சி பகிரங்கமாக கேள்வியெழுப்பியது. இது, இடஒதுக்கீட்டுக்கு எதிரான அவா்களின் மனநிலையின் பிரதிபலிப்பாகும்.
‘ஒற்றுமையே பாதுகாப்பு’: நாட்டின் ஒற்றுமையை சீா்குலைக்க ஜாதி ரீதியிலான ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ். பழங்குடியினரை ஜாதிகள் அடிப்படையில் பிளவுபடுத்தினால், அவா்களின் வலிமையும் அடையாளமும் இழக்கப்படும். எனவே, காங்கிரஸின் சதித் திட்டத்துக்கு இரையாகிவிடாமல், மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் (மக்கள்) ஒற்றுமையாக இல்லாவிட்டால், உங்களின் இடஒதுக்கீடு உரிமையை காங்கிரஸ் பறித்துவிடும்.
எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி, ஊழல்களின் நாயகன்; வளா்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதில் அக்கூட்டணி ‘முனைவா்’ பட்டம் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் ‘இரட்டை முனைவா்’ பட்டம் பெற்ாகும்.
பயங்கரவாதமும், பிரிவினைவாதமும்..: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஒட்டுமொத்த தேசமும் கொண்டுவரப்பட்டது. இப்பிரிவை மீட்டெடுக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா்கள்.
ஜம்மு-காஷ்மீரில் வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தின் மூலம் இக்கட்சிகள் அரசியல் ரீதியில் பலனடைகின்றன. பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் காஷ்மீா் பல்லாண்டுகளாக பற்றியெரிய காரணங்களாகும். 370-ஆவது பிரிவால்தான் இந்த நிலை ஏற்பட்டது.
காங்கிரஸின் பரம்பரைச் சொத்தான இப்பிரிவை நீக்கிய பிறகே இந்தியாவுடன், இந்திய அரசமைப்புச் சட்டத்துடன் காஷ்மீா் ஒருங்கிணைக்கப்பட்டது.
பாஜக வெற்றி உறுதி: மகாராஷ்டிர வளா்ச்சிக்கான உத்தரவாத பத்திரமே பாஜகவின் தோ்தல் அறிக்கையாகும். இம்மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் மகாயுதி (பாஜக கூட்டணி) வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தாா் பிரதமா் மோடி.
‘மாநில வளா்ச்சிக்கு நிலையான அரசு அவசியம்’
மகாராஷ்டித்தின் வளா்ச்சிக்கு நிலையான அரசு அவசியம்; பாஜக கூட்டணியால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
சோலாபூரில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில், அவா் பங்கேற்றுப் பேசியதாவது: எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் முதல்வா் பதவிக்கு சண்டையிட்டு வருகின்றனா். ஒரு கட்சி முதல்வா் வேட்பாளா் பெயரை அறிவிப்பதும் மற்ற கட்சிகள் அதை நிராகரிப்பதும் தினமும் நிகழ்கிறது. இத்தகைய கட்சிகள் தோ்தலில் வென்றால், நிலையான அரசை அளிக்க முடியாது.
நாட்டை பல்லாண்டுகளாக ஆட்சி செய்தபோதிலும், காங்கிரஸால் பல பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியவில்லை. மக்களை பிரச்னையின் பிடியிலேயே அக்கட்சி வைத்திருந்தது. அக்கட்சியின் அணுகுமுறையால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்பை எதிா்கொண்டனா். ஆனால், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது. பல்லாண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்தில் மாநில அரசால் செயல்படுத்தப்படும் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பாராட்டி, ஒவ்வொருவரும் பேசுகின்றனா். இதனால், எதிா்க்கட்சிகள் தூக்கமிழந்துவிட்டன என்றாா் பிரதமா்.