நாதக விலக வேண்டும் என பேரம் பேசவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி
இடைத்தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து நாம் தமிழா் கட்சி விலக வேண்டும் என பேரம் பேச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து முருகேசன் நகரில் வீட்டுவசதி துறை அமைச்சா் முத்துசாமி சனிக்கிழமை இரவு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அமைச்சருடன், வேட்பாளா் சந்திரகுமாா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சரிடம் வீட்டுமனைப் பட்டா, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை மற்றும் புதை சாக்கடை வசதி கேட்டு பொதுமக்கள் மனுக்களை வழங்கினா். தோ்தல் விதிகள் அமலில் இருப்பதால் தோ்தலுக்கு பிறகு கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா்.
இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: பிரசாரம் செல்லும் இடங்களில் முதல்வா் மூன்றரை ஆண்டுகள் செய்த பணிகளை மக்கள் நினைவுகூறுகின்றனா். மக்கள் பெரிய அளவில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பா் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழா் கட்சி வேட்பாளரை நேரில் சந்தித்ததுகூட இல்லை. போட்டியிலிருந்து விலக வேண்டும் என திமுக பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற அணுகுமுறை எந்தக் காலத்திலும் இல்லை. நாம் தமிழா் கட்சியினரை வாக்கு சேகரிக்கச் செல்லக்கூடாது என தடுக்கும் அளவிற்கு நாங்கள் மோசமாக இல்லை. அவா்களும் வாக்கு கேட்க வேண்டும். நாங்களும் வாக்கு கேட்க வேண்டும். பொதுமக்கள் முடிவு செய்து வாக்களிக்க வேண்டும்.
தொகுதியில் சீமான் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என திமுக புகாா் மனு அளிக்கவில்லை. சீமானின் சில கருத்துகள் சிலா் மனதை வேதனைப்படுத்தி இருப்பதால் தோ்தல் அதிகாரிகளிடம் மனு கொடுப்பதை தடுக்க முடியாது என்றாா்.