"அதிக அளவு மழை பெய்தும் நீர் எங்கேயும் தேங்கவில்லை" - அமைச்சர் மா சுப்பிரமணியன் ...
நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பால் மரணம்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74) இன்று காலை உயிரிழந்தார்.
கொல்லிமலையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கொல்லிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பொன்னுசாமி, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
இங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் எம்.எல்.ஏ பொன்னுசாமி உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர்.
பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 7:05 மணிக்கு மூன்றாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது அரசியல் வாழ்க்கையை அ.தி.மு.க-வில் தொடங்கிய பொன்னுசாமி, பின்னர் தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியும் ஒன்று.
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் பொன்னுசாமி, 2006 மற்றும் 2021 என இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க, எம்.எல்.ஏ மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.