நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
"நாளைக்கு என்னாகும் தெரியாது" - பொடி வைத்த ஜோடங்கர் - காங்கிரஸ் கணக்கு என்ன?
விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா, அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று(அக்.27-ம் தேதி) நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக-வும் காங்கிரஸ் கட்சியும் வெவ்வேறு பாதைகளில் கடந்த காலங்களில் பயணித்திருந்தாலும், நாட்டின் நன்மைக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தற்போது ஒரே பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸின் இளம் தலைவராக இருக்கக்கூடிய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, என்மீது காட்டக்கூடிய அளவற்ற பாசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ராகுல் காந்தியை சகோதரர் என்று நான் சொல்வதற்குக் காரணம், அவர் என்னை அண்ணன் என்று அழைப்பதுதான். அவருக்கு நான் மூத்த அண்ணன். கொள்கை உறவாகவும் வலுப்பெற்று இருக்கிறோம்..." என்று பெருமை பொங்கியிருந்தார்.

முதல்வரின் இந்த திடீர் ராகுல் பாசத்திற்குக் காரணமே, சமீபத்தில் நடந்து முடிந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டம்தான் என்கிறது சத்தியமூர்த்திபவன் வட்டாரங்கள். "அந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை. காங்கிரஸ் அறக்கட்டளை மறுசீரமைப்பு தொடர்பாகத்தான் பேசினோம்" என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்திருந்தாலும், செயற்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும் சில கருத்துக்களை மேலிட பொறுப்பாளரான கிரிஷ் ஜோடங்கர் பேசியதாகச் சொல்கிறார்கள் சீனியர் கதர்கள்.
அதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் சிலர், "தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள் உள்ளன. இவற்றை நிர்வகிப்பதற்கு, போதுமான அறக்கட்டளை உறுப்பினர்கள் இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை வந்தபிறகு, சொத்துப் பாதுகாப்புக்குழுவை அமைத்து, அறக்கட்டளையின் கீழ் வரும் சொத்துக்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டார். சென்னை அண்ணாசாலையில், அறக்கட்டளைக்குச் சொந்தமான 2.5 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தை மீட்டெடுக்க அவர் முயன்றபோது பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தன. அதைத்தொடர்ந்துதான், அறக்கட்டளையை மறுசீரமைத்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.

அதன்படி, கட்சியின் மேலிட பொறுப்பாளர், மாநிலத் தலைவர், சட்டமன்றக் கட்சித் தலைவர், பொருளாளர் உள்ளிட்டவர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இடம்பெறப் போகிறார்கள். அதுகுறித்துப் பேசத்தான் செயற்குழுவும் கூட்டப்பட்டது. அகில இந்திய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கி, செயற்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய கிரிஷ் ஜோடங்கர், '125 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணியை நாம் வேகப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி அமைப்பதில் சுணக்கம் இருப்பதாக இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அதை சரிசெய்து, டிசம்பர் மாதத்திற்குள் உருப்படியாக பூத் கமிட்டி பணிகளை முடிக்க வேண்டும்.
இன்றைய சூழலில், நாம் தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர்கிறோம். நாளைக்கு என்னாகும் என்பது தெரியாது. பீஹார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, டெல்லி தலைமையின் மனநிலை என்னவென்பது புரியவரும். தவெக தலைவர் விஜய்யுடனான கூட்டணி குறித்து, பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம். டெல்லி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதையொட்டி நமது பயணத்தைத் தொடர்வோம்' என்று பொடி வைத்துப் பேசினார். ஜோடங்கரின் பேச்சு, காங்கிரஸ் தலைவர்களை குழப்பமடையவும் செய்திருக்கிறது. திமுக-வுடன் அனுசரணையாகச் செல்வதா, வேண்டாமா என்பதில் யாருக்கும் தெளிவில்லை. அதனால்தான், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் திருமண விழாவுக்கு முதல்வர் வந்தபோது, அவரை வரவேற்க சீனியர்கள் யாரும் பெரிதாக வரவில்லை. அக்.27-ம் தேதி, எஸ்.ஐ.ஆர் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியபோது, அந்தக் கூட்டத்திற்கு செல்வப்பெருந்தகை செல்லவில்லை. காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலுதான் பங்கேற்றார்.

பீஹார் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால், வடமாநிலங்களில் காங்கிரஸின் கரம் ஓங்கும் வாய்ப்புகள் பிரகாசமாகும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, வடமாநிலங்களில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும், தென்னிந்தியாவில் புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியிலும் காங்கிரஸ் தலைமை ஈடுபடும். அந்தவகையில், தவெக-வுடன் கூட்டணிக்குச் செல்லலாம் என்கிற கணக்கில் இருக்கிறது டெல்லி காங்கிரஸ் மேலிடம். ஒருவேளை, பீஹாரில் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவானால், திமுக-வுடனான கூட்டணியே தொடரலாம். அதைத்தான் தன்னுடைய பேச்சில், மறைமுகமாக குறிப்பிட்டார் கிரிஷ் ஜோடங்கர். தமிழகத்தில், யாருடன் காங்கிரஸ் கூட்டணிக்குச் செல்லப்போகிறது என்பது, பீஹார் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அமையும்" என்றனர் விரிவாக.
தவெக தரப்பிலும், காங்கிரஸை தங்களுடன் கூட்டணிக்குள் கொண்டுவர விருப்பமாகவே இருக்கிறார்கள். கரூர் சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு முறை விஜய்யுடன் ராகுல்காந்தி போனில் பேசியிருப்பதை, தங்களுக்கு ஆதரவான நிலைப்படாகவும் பார்க்கிறார்கள். காங்கிரஸ் - தவெக கூட்டணி அமைந்தால், சிறுபான்மை சமுக வாக்குகள், இளைஞர்களின் வாக்குகளையும் வசப்படுத்திவிடலாம் என்பது தவெக-வின் அரசியல் கணக்கு. யாருடைய கணக்கு செல்லுபடியாகப் போகிறது என்பது, பீஹார் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நவம்பர் 14-ம் தேதிக்குப் பிறகு தெரியவந்துவிடும்.




















