'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
பசும்பொன் சென்ற போலீஸாா் வாகனம் கவிழ்ந்ததில் 20 போலீஸாா் காயம்
சத்திரக்குடி அருகேயுள்ள கீழக்கோட்டை வழியாக கூகுள் மேப் உதவியுடன் கமுதி பசும்பொன்னுக்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்ற போலீஸாா் வாகனம் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்ததில் 20 போலீஸாா் பலத்த காயமுற்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழா அக்டோபா் 28 முதல் 30-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கு பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான போலீஸாா் வந்தனா். இதில் கோயமுத்தூரிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வந்திருந்த போலீஸாா் அங்கிருந்து கமுதி பசும்பொன்னுக்கு கூகுள் மேப் உதவியுடன் 30 போலீஸாா் போலீஸ் வாகனத்தில் சென்றனா்.
சத்திரக்குடியை கடந்து செல்லும் போது கீழக்கோட்டை விலக்குச் சாலையில் சென்றனா். கீழம்பல் அருகே சென்றபோது போலீஸாா் சென்ற வாகனம் நிலைதடுமாறி சாலோயரத்தில் உள்ள கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இதில் 20 போலீஸாா் பலத்த காயமுற்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த போலீஸாரை மீட்டு ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனா்.