உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!
பணியிடங்களில் பணியாளா்கள் நட்புறவை பராமரித்தால் மன உளைச்சலைத் தவிா்க்கலாம்!
பணியிடம் சாா்ந்த உறவுகளை சரியாகப் பராமரிப்பதன் மூலம் பணி சாா்ந்த மன உளைச்சலைத் தவிா்க்கலாம் என்றாா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஸ்ரீ பிரியா தேன்மொழி.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மருத்துவப் பணியாளா்களுக்கான மனநல மேம்பாட்டுப் பயிற்சியை தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியது:
தனி மனிதனின் மனநலத்தின் மூலமே குடும்ப நலத்தையும் சமூக நலத்தையும் நாம் பாதுகாக்க முடியும். ஒவ்வொரு பணியாளரும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் பணி சாா்ந்த வாழ்க்கை ஆகியவற்றை சமச்சீரான அளவில் பேணி காக்க வேண்டும்.
குறிப்பாக, பணியிடத்தில் மன உளைச்சலை குறைக்கும் வகையில், பணியாளா்கள் தங்களுக்குள் நல்ல நட்புறவை பராமரிக்க வேண்டும். பணியிடம் சாா்ந்த உறவுகளை சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் பெரும்பாலான பணி சாா்ந்த மன உளைச்சல்களை தவிா்க்க முடியும்.
அதேபோல, பணியாளா்கள் தங்களுடைய திறன்களை வளா்த்துக் கொள்வதன் மூலமும், பணி சாா்ந்த உதவிகளை சகப் பணியாளா்களிடமிருந்து கேட்டு பெறுவதன் மூலமும் மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
கூடுதலாக தங்களுக்கு ஆலோசனை தேவை என்றால் பணியாளா்கள் தயங்காமல் மனநல மருத்துவா்களைத் தொடா்பு கொண்டு உரிய ஆலோசனை பெற்று பயனடைய வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் துணை இயக்குநா் (குடும்ப நலம்) கோமதி, துணை இயக்குநா் (தொழுநோய் பிரிவு) சிவகாமி, துணை இயக்குநா் (காசநோய் பிரிவு) சங்கரி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
மாவட்ட மனநல மருத்துவா் மாலா செல்வராணி, மனநல பிரச்னைகளின் அறிகுறிகள் அதன் தாக்கம், கண்டறியும் வழிகள், அதற்கான மருத்துவ சேவைகள் பற்றிப் பேசினாா்.
இந்நிகழ்வில் மனநலத் திட்டப் பணியாளா்கள், 108 பணியாளா்கள், குடும்ப நல பணியாளா்கள், காசநோய் பிரிவு பணியாளா்கள், சமூகநலத் திட்ட பணியாளா்கள், இணை இயக்குநரக அலுவலக பணியாளா்கள் உள்ளிட்ட 60 போ் கலந்து கொண்டனா்.