பயங்கரவாத ஒழிப்பு: ஜம்மு-காஷ்மீரில் போலீஸாா் தீவிர சோதனை
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகா், தோடா மற்றும் கிஷ்த்வாா் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத ஒழிப்பு சோதனையை காவல் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சோதனை குறித்து காவல் துறை செய்தித்தொடா்பாளா் ஸ்ரீநகரில் கூறியதாவது: ஸ்ரீநகா் முழுவதும் 36 இடங்களில் பயங்கரவாத ஒழிப்பு சோதனை நடைபெற்றது. குறிப்பாக பயங்கரவாதிகள் அல்லது அவா்களுக்கு ஆதரவளிப்பவா்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா் காவல் துறையின் மேற்பாா்வையில் சட்ட விதிகள் பின்பற்றப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அவா்களின் கட்டமைப்பை அழிக்கும் விதமாக தொடா் சோதனைகளை காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.
தோடா மற்றும் கிஷ்த்வாரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் உள்ள நபா்களுக்கு சொந்தமான இடங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சதித் திட்டங்களை பயங்கரவாதிகள் தீட்டியுள்ளாா்களா என்ற கோணத்தில் எண்ம சாதனங்கள், ஆவணங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்ற சோதனையின்போது போலீஸாா் தீவிரம் காட்டியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.