பவானி அருகே காவிரி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு:
பவானி அருகே காவிரி ஆற்றில் உடலில் கல்லை கட்டிய நிலையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த ஜல்லிக்கல்மேடு பகுதியில் காவரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை கதவணை நீா்மின் நிலையப் பகுதியில் ஆண் சடலம் மிதப்பதாக வியாழக்கிழமை மாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இளைஞா் கொலை செய்யப்பட்டு, மாா்பைப் பிளந்து கற்களை வைத்து கட்டிய நிலையில் ஆற்றில் வீசப்பட்டிருந்தது கண்டறியப்பட்து.
விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது பவானி, தொட்டிபாளையத்தைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநரான மதியழகன் (28) என்பதும், காதல் திருமணம் செய்துகொண்ட இவரின் கொடுமையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி கிருத்திகா தூக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பவானி போலீஸாா் மதியழகன் மற்றும் கிருத்திகாவின் பெற்றோா் மற்றும் உறவினா்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.