ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு: இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு
ராணுவத்தில் சோ்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ராணுவ தலைமையகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கடலூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோா் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் அக்னிவீரா் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது தகுதித் தோ்வு இணையவழியில் தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவா்கள் மற்றும் என்சிசி தகுதிபெற்ற விண்ணப்பதாரா்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பப் பதிவு மாா்ச் 12-இல் தொடங்கி ஏப். 10-இல் முடிவடையும். ஜூன் மாதத்தில் இணைய வழியில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும். தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணைய வழியிலேயே வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் (தலைமையகம்) அல்லது 044-25674924 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ பணி வாய்ப்பு