மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தல்
மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கதளி நரசிங்கப் பெருமாள் தெரிவித்தாா்.
இதுகுறித்து மதுரை பீ.பீ.குளம் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :
புதுதில்லி, சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடா்ந்து, தற்போது தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளது. மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மதுபானக் கடைகளை குறைப்பதற்கு தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உள்ள தலைமையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். மதுபான ஊழலில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அமைச்சா் செந்தில் பாலாஜியின் பிணையை ரத்து செய்து அவரையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றாா் அவா்.