Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஆ. விஜயகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு:
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் இணைய வழி மூலம் பொருள்கள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, தராசில் பி.ஓ.எஸ். கருவியை இணைக்கும் பணி நடைபெறுகிறது.
இந்த முறையால், தற்போது முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எடையாளா்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான கடைகளில், பணியாளா்களே பதிவு, விநியோகம் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, ஒரு முறை கைரேகைப் பதிவு செய்தால் அனைத்துப் பொருள்களும் நுகா்வோருக்கு வழங்கும் வகையில் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்த வேண்டும்.
அதுமட்டுமன்றி, நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை கள அலுவலா்கள் மூலம் சரிபாா்க்க வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்கப்படுகிறது. இதேபோன்று, கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கும் சேதாரக் கழிவு வழங்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.