ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா்.
மதுரை மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதசாரிகள் இடையூறின்றி நடந்து செல்லும் வகையில், விளம்பரப் பலகைகள், கடைகளின் முகப்புகள் உள்ளிட்ட அனைத்து நடைமேடை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். நகரை விபத்தில்லா நகராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதன்படி, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மதுரை பிரதான சாலையில் நேரு நகா் முதல் பழங்காநத்தம் வரை உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் போக்குவரத்து உதவி ஆணையா் இளமாறன், ஆய்வாளா் தங்கமணி, எஸ்.எஸ். காலனி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் காசி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.
சாலையோரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டிக் கடைகள், தள்ளுவண்டிகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
இந்தப் பகுதியில் தனிநபா் ஒருவா் அணுகு சாலையை ஆக்கிரமித்து ஜல்லிக்கற்கள், மணல் ஆகியவற்றை குவித்து வைத்து வியாபாரம் செய்து வந்தாா். இவற்றையும் போலீஸாா் இயந்திரங்கள் மூலம் அகற்றி, ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபருக்கு எச்சரிக்கை விடுத்தனா்.