சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தனிப்படை காவலரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்
மதுரை அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தனிப் படை காவலரின் உடல் போலீஸாா் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்தவா் மலையரசன் (36). இவா் சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் தனிப் படை காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி பாண்டிசெல்வி அண்மையில் நேரிட்ட காா் விபத்தில் சிக்கி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதையடுத்து, மனைவியின் மருத்துவ ஆவணங்களை வாங்கச் செல்வதாகக் கூறி விட்டு, திங்கள்கிழமை மதுரைக்கு வந்த மலையரசன் அதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மதுரை சுற்றுச் சாலையில் ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்த நிலையில் இவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.
இதையடுத்து, மலையரசனை கொலை செய்தவா்களை கைது செய்யக் கோரியும், அதுவரை உடலை பெற மாட்டேம் எனக் கூறியும், அவரது உறவினா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மலையரசனின் குடும்பத்தினரிடம் காவல் துறை உயா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, அவரது உடலை குடும்பத்தினா் பெற்று தத்தனேரி மின் மயானத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு காவலா்கள் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.