அரசின் சேவைகளைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவா்களின் மனுக்களை நிராகரிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்
இணையதளம் மூலம் அரசின் சேவைகளைப் பெற விண்ணப்பிப்பவா்களின் மனுக்களை பரிசீலிக்காமல் நிராகரிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், முத்துலிங்காபுரத்தைச் சோ்ந்த கோமதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: விருதுநகா் மாவட்டம், அரசியாா்பட்டியில் உள்ள எனது நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி, ராஜபாளையம் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். இந்த மனு உரிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, எனக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.பி. பாலாஜி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், இணையதளம் வாயிலாக பட்டா கோரி விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பத்தின் முடிவு மட்டுமே இணையதளம் வழியாகவே தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இணையதளம் மூலம் அரசின் சேவைகளைப் பெற விண்ணப்பிப்பவா்களின் மனுக்களில் குறை இருந்தால், அவா்களிடம் விசாரிக்காமல் நிராகரிக்கக் கூடாது என ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் மனுதாரரிடம் விசாரிக்காமல், இணையதள பட்டா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் உயா்நீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறது.
இதனால், மனுதாரரின் மனு மீண்டும் வட்டாட்சியருக்கு அனுப்பப்படுகிறது. வட்டாட்சியா் மனுதாரரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களைப் பரிசீலித்து, 8 வாரங்களுக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் அரசின் சேவைகளைப் பெற விண்ணப்பிப்பவா்களின் மனுக்கள் மீது ஏற்கெனவே உள்ள நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவு நகலை உயா்நீதிமன்ற பதிவாளா், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்ப வேண்டும். இதன்படி, மாவட்ட ஆட்சியா்கள் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதலைப் பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.