Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
அறந்தாங்கி புதிய மதுக்கடைக்கு எதிராக வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அறந்தாங்கியில் புதிதாக மதுபானக் கடை திறப்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த சபீக் யாசிா் சாதிக் தாக்கல் செய்த பொது நல மனு:
அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்கெனவே ஒரு அரசு மதுபானக் கடை உள்ளது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுபானக் கடையைத் திறக்க ஏற்பாடு செய்து வருகின்றனா். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவா். எனவே, புதிய மதுபான கடையைத் திறக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் குறிப்பிடும் பகுதியில் புதிய மதுபானக் கடை திறக்க வேண்டாம் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனா். புதிய மதுபானக் கடைகளுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தினால், அந்த பகுதியில் மதுபானக் கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதை மீறி புதிய மதுபானக் கடை எப்படி திறக்க முடியும்? இந்த வழக்கு குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.