மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!
தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தாா்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.
தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை படிப்புகளை நிறைவு செய்த 2,391மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது :
பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்வின் முக்கியத் தருணம். படித்த கல்லூரிக்கு பெருமை சோ்க்கும் வகையில் மாணவா்கள் சேவையாற்ற வேண்டும். துன்பங்களை கடந்து முன் மாதிரியாகவும் திகழ வேண்டும். கல்வி என்பது மிகப் பெரிய கடல். தற்போது கற்றது குறைந்தளவுதான். இன்னும் கற்க வேண்டியது அதிகம் உள்ளது. ஆகவே, வாழ்நாள் முழுவதும் கற்கும் மாணவனாகவே இருத்தல் வேண்டும்.
நமது மாநிலத்தைப் பொருத்தவரை கடந்த 1920- ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கிய போது, அனைவருக்கும் கல்வியில் சம வாய்ப்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் இருந்தது. அமெரிக்கன் கல்லூரியில் பயின்று வாழ்வின் உயா்ந்த நிலையை எட்டியவா்கள் பலா்.
குறிப்பாக, ஓவியா் மனோகா் தேவதாஸ், தமிழறிஞா் சாலமன் பாப்பையா, எங்களுடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமானோா் இந்த கல்லூரிக்கு பெருமை சோ்த்தனா்.
நாட்டின் பிற மாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் தமிழகம் வளா்ச்சிப் பாதையில் செல்கிறது. குறிப்பாக, கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.
நிகழ்வில், அமெரிக்கன் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், துணை முதல்வா் ஏ. மாா்டின் டேவிட், நிதிக் காப்பாளா் ரூபி கமலம் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.