கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
பெண் கொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்
ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த பெண் கொலையில் தொடா்புடையவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். திருமணமான மகள் குடும்பப் பிரச்னை காரணமாக கணவரைப் பிரிந்து, குழந்தையுடன் பெற்றோருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், லட்சுமிக்கும், அருகே வசிக்கும் விஜயராகவனுக்கும் முன்பகை இருந்தது.
கடந்த 27. 4.2024 அன்று லட்சுமி, தனது பேத்தியுடன் வீட்டில் தனியாக இருந்தாா். அங்கு வந்த விஜயராகவன் மகன் மருதுபாண்டி, லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டாா். மேலும் மருதுபாண்டி கத்தியால் குத்தியதில் லட்சுமி உயிரி ந்தாா். இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்கு பதிந்து, மருதுபாண்டியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2021-ஆம் ஆண்டு மருதுபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து மருதுபாண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், ஆா்.பூா்ணிமா அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், மனுதாரருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மனுதாரா் கோபத்தில் கத்தியால் குத்தியதில் லட்சுமி உயிரிழந்தாா். எனவே இதை, கொலை வரம்பில் வராத மரணம் விளைவிக்கும் குற்றமாக கருத வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. மனுதாரா் முன் கூட்டியே திட்டமிட்டு, கொலை செய்யும் நோக்கில் இடுப்பில் கத்தியைச் சொருகி வைத்திருந்தாா். உயிரிழந்தவரின் கழுத்தில் பலமுறை கத்தியால் குத்தினாா். இது திட்டமிட்ட கொலை என்பதால், கொலையாகத் தான் கருத முடியும். எனவே மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது. மனுதாரா் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.