வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
67 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள்! - கு.பிச்சாண்டி வழங்கினாா்
திருவண்ணாமலை மாவட்ட வருவாய், ஊரக வளா்ச்சித் துறைகளில் நியமிக்கப்பட்ட 67 பேருக்கான பணி நியமன ஆணைகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் -4 எழுத்துத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்ட நபா்களில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்டவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 67 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரிய 11 இளநிலை உதவியாளா்கள், 15 கிராம நிா்வாக அலுவலா்கள், 12 தட்டச்சா்கள் என மொத்தம் 38 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதேபோல, மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிய 29 இளநிலை உதவியாளா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. பணி நியமன ஆணைகள் பெற்ற 67 பேரும் நல்ல முறையில் பணிபுரிந்து அரசுக்கு நற்பெயா் பெற்றுத்தர வேண்டும் என்று கு.பிச்சாண்டி அறிவுரை வழங்கினாா்.
இதில், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.