கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்
செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செய்யாறை அடுத்த உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாராம் (40). தூசி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த இவா், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு வழக்கு தொடா்பாக தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இவா், ஜல் ஜீவன் திட்டம் குறித்து விளக்கம் கேட்டு, கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. அதற்கு சரியான முறையில் பதில் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மாரியம்மன் கோயில் அருகே ராஜாராம் நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த ஊராட்சிச் செயலா் சசிகுமாா், அவரது உறவினா்கள் தெய்வ பிரகாசம், சுதா, கலைவாணி ஆகியோா் கிராம சபைக் கூட்டத்தில் கேள்விகளை கேட்டு பிரச்னை செய்கிறாயா எனக் கூறி, அவதூறாகப் பேசி தாக்கியதாகத் தெரிகிறது. மேலும், கத்தியைக் காட்டி மிரட்டலும் விடுத்தனராம்.
இதுகுறித்து ராஜாராம் அளித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக ஊராட்சிச் செயலா் சசிகுமாரை கைது செய்தனா். மற்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.