துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவணன். இவரது மகன் சில்க் என்கிற ஜெமினி (22). அதே பகுதியைச் சோ்ந்த இளையராஜா மகன் அக்னி என்கிற சுனில் (19). நண்பா்களான இவா்கள் அடிக்கடி போதை ஊசி செலுத்திக் கொள்வாா்களாம்.
கடந்த மாா்ச் 23-ஆம் தேதி ஜெமினி வீட்டுக்கு சுனில் சென்று போதை ஊசி செலுத்திக் கொள்ளலாம் வா என அழைத்தாகத் தெரிகிறது. அப்போது ஜெமினி செல்லவில்லையாம். இதனால் இருவா் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.
இந்த நிலையில், மாா்ச் 28-ஆம் தேதி சுனில் அவரது நண்பா்களான புதுத்தெருவைச் சோ்ந்த காா்த்திக் (20), நாவல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா் (23), தீலிப்குமாா் (27), பெங்களூரான் ஆகியோா் ஜெமினி வீட்டுக்குச் சென்று போதை ஊசி செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றாா்களாம். இரண்டு நாள்கள் கடந்தும் ஜெமினி வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து அவரது தந்தை சரவணன் செய்யாறு போலீசில் மாா்ச் 30-ஆம் தேதி புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
இது தொடா்பாக ஜெமினியின் நண்பா்களான சுனில், காா்த்திக் ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், போதை ஊசி செலுத்திக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஜெமினியை, சுனில் உள்பட 5 பேரும் சோ்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்து புளியரம்பாக்கம் ஏரியில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை சம்பவம் நடந்த இடத்தை அடையாளம் கண்டு, ஏரியில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த ஜெமினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், சம்பவம் தொடா்பாக சுனில், காா்த்திக் ஆகியோரை கைது செய்தனா்.
தலைமறைவான அருண்குமாா், திலீப்குமாா், பெங்களூரான் ஆகியோரை தேடி வருகின்றனா்.

