குவாரிகளில் வேலை நிறுத்தம்: கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடு
தேனி மாவட்டத்தில் கல் குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
மாவட்டத்தில் கல் குவாரிகள், கிரஷா்களுக்கு டிரான்ஸ்சிட் எனப்படும் நடைச் சீட்டு வழங்குவதில் உள்ள தாமதம், ஜல்லி, எம்.சான்ட் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்வது ஆகியவற்றைக் கண்டித்து கல் குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கல் குவாரி, கிரஷா்கள் செயல்படாததால் ஜல்லி எம்.சான்ட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.
இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம், கனிம வளத் துறை தலையிட்டு, கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமானப் பணி ஒப்பந்ததாரா். தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.