பஞ்சாப் சிவசேனை தலைவா் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸாா்
பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் மோகா மாவட்டத் தலைவரான மங்கத் ராய் (52), வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலில் அருகில் நடந்து சென்ற 12 வயது சிறுவன் மீதும் குண்டு பாய்ந்தது. சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மங்கத் ராய் மீதான தாக்குதலுக்கு சமூக ஊடக பதிவு மூலம் மூவா் பொறுப்பேற்றனா். அவா்கள் மோகா பகுதியைச் சோ்ந்த அருண் (எ) சங்கா, அருண் (எ) தீப்பு, ராஜ்வீா் என அடையாளம் தெரிந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தாக்குதலில் தொடா்புடையவா்கள் முக்த்சாா் மாவட்டம் மலோட் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு விரைந்தனா். அப்போது, அவா்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தி, மோகா பகுதியைச் சோ்ந்த சங்கா, தீப்பு, ராஜ்வீா் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இதில் சங்கா, தீப்பு இருவருக்கும் கால்களில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. அவா்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்’ என்றனா்.