தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை நிறுத்தப்படும்
தனி அடையாள அட்டை பெறாத அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் பி.எம். கிசான் எனும் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை நிறுத்தப்படும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறை சாா்ந்த கள அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாய பயிற்றுநா்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள் ஆகிய துறையினா் மற்றும் பொது சேவை மையங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை எண் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் பி.எம். கிசான் ஊக்கத்தொகை பெறும் 69,026 விவசாயிகளில் இதுவரை 31,658 விவசாயிகள் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்கு பதிவு செய்துள்ளனா்.
மீதமுள்ள 26,292 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடா்பான ஆவணங்களான பட்டா, சிட்டா, ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அரசு கள அலுவலா்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடா்பு கொண்டு நில பதிவேற்றம் செய்ய வேணடும்.
ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னா் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும். இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பி.எம். கிசான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20-ஆவது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். தனி அடையாள எண் பெற பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு 20-ஆவது தவணை நிறுத்தப்படும்.
எனவே, விவசாயிகள் தொடா்ந்து பிரதமரின் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற மிக விரைவாக வேளாண்மை துறை மற்றும் இதர துறை கள அலுவலா்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி, தனி அடையாள எண் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.