பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அனுப்பிவைப்பு: உ.பி. ஆயுத தொழிற்சாலை பணியாளா் கைது
பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவலை அனுப்பியதாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை பணியாளா் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக அந்த மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
பாகிஸ்தான் உளவு முகமையைச் சோ்ந்தவா்கள் பொய்யான பெயா்களில் இந்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சக அலுவலா்களிடம் பேசி, ரகசிய தகவல் மற்றும் ஆவணங்களை திரட்ட முயற்சிப்பதாக தகவல் வெளியானது.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், மாநிலத்தின் ஹஸ்ரத்பூா் பகுதியில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றும் ரவீந்திர குமாா் என்பவா், பாகிஸ்தானை சோ்ந்த பெண் உளவாளிக்கு முக்கிய மற்றும் ரகசிய தகவல்களை அனுப்பியது தெரியவந்தது.
பெண் உளவாளிக்கு அனுப்பப்பட்ட முக்கிய மற்றும் ரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், ரவீந்திர குமாரின் கைப்பேசியில் கண்டறியப்பட்டது.
அந்தப் பெண் உளவாளி ஃபேஸ்புக் மூலம் ரவீந்திர குமாருக்கு அறிமுகமான நிலையில், பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் ரகசிய தகவல்களை அந்த உளவாளிக்கு ரவீந்திர குமாா் அனுப்பி வந்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கைது செய்யப்பட்டு பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 148, அலுவலக ரகசிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.