Doctor Vikatan: உடல் பருமனுடன் உள்ளவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் என்று அர்த்தமா?
Doctor Vikatan: என் வயது 35. நான் இளவயதிலிருந்தே சற்று பருமனான உடல்வாகு கொண்டவள்தான். அதாவது சராசரியைவிட பருமனான தோற்றம் கொண்டவள். வாக்கிங், சைக்கிளிங் என தினமும் ஏதோ ஓர் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளேன். ஆனாலும், என்னால் சராசரி உடல்வாகுக்குத் திரும்ப முடியவில்லை. எனக்கு வேறு எந்த நோய்களும் இல்லை. இந்நிலையில், குண்டாக இருப்பது பரவாயில்லையா.... பருமனான உடல்வாகு உள்ளவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

உடல் பருமனாக உள்ளவர்கள் எல்லோரும் ஆரோக்கியமற்றவர்கள் என்றோ, ஒல்லியாக உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்றோ சொல்லவே முடியாது. உடல் எடையை வைத்தும், பி.எம்.ஐ அளவை வைத்தும், பார்ப்பதற்கு குண்டாகத் தெரிவதை வைத்தும் பலரும் தான் ஆரோக்கியமாக இல்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள். அப்படியல்ல...
நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது விஸெரல் ஃபேட் (Visceral fat) மற்றும் சப்கியூட்டேனியஸ் ஃபேட் (Subcutaneous fat) என்ற இருவகை கொழுப்புகளைத்தான். இவற்றில் விஸெரல் ஃபேட் என்பது, வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளைச் சுற்றி உள்ள கொழுப்பு ஆகும். இது உடலுக்குள் ஆழமாகப் படியும் ஒரு வகை கொழுப்பு. இது அதிகப்படியாக இருந்தால், உடலில் பல பிரச்னைகள் ஏற்படும். சப்கியூட்டேனியஸ் ஃபேட் என்பது சருமத்துக்கு அடியில் உள்ள கொழுப்பு.
சுமோ வீரர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் மிகவும் பருமனாக இருப்பார்கள். இவர்களுக்கு இருப்பது இந்த வகை சப்கியூட்டேனியஸ் ஃபேட்தான். அவர்களது தோற்றத்தை வைத்து அவர்களை ஆரோக்கியமற்றவர்கள் என்று சொல்ல முடியாது. மற்றவர்களைவிடவும் அவர்கள் ஆரோக்கியமானவர்களே...
இந்தியர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு தொப்பை இருக்கும். இவர்களுக்கு இருப்பது முதலில் குறிப்பிட்ட விஸெரல் ஃபேட் எனப்படும் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு.இவர்கள் ஆரோக்கியமற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.

எனவே, வெறும் பி.எம்.ஐ அளவை மட்டுமே வைத்து ஒருவரது ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதற்கு பதில், 'பாடி ரவுண்ட்னெஸ் இண்டெக்ஸ்' (Body roundness index) அல்லது 'த வெயிஸ்ட்-ஹிப் ரேஷ்யூ (The waist-to-hip ratio ) என்பதைக் கணக்கிட்டுப் பார்த்து உங்கள் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவரது ஆரோக்கியம் என்பது ஒருவரது மரபியல், வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம் என பல விஷயங்களைப் பொறுத்தது. சாதாரண எடையில் இருக்கும் நபர்கள், உடல் இயக்கமே இல்லாமல் இருப்பதும், உடல் பருமனுடன் இருப்பவர்கள் உடலியக்கத்துடன் இருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது என்று இருப்பதும் உண்டு. இந்த இருவரை ஒப்பிட்டால், சாதாரண எடையுடன் இருப்பவர்களைவிடவும், பருமனாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்வோர் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, உங்கள் விஷயத்தில் நீங்கள் ஆக்டிவ்வாக இருக்கும்வரை, உடற்பயிற்சிகள் செய்யும்வரை, உடல் எடை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
