செய்திகள் :

`கேது பெயர்ச்சியும் விநாயகர் வழிபாடும்' தடைகள் விலக 12 ராசிகளுக்கும் ஒரு வழிகாட்டல்

post image

கிரகங்களில் சாயாகிரகங்கள் என்று அழைக்கப்படுபவை ராகு - கேது ஆகியன. சாயா என்றால் நிழல் என்று பொருள். ராசி மண்டலத்தில் தங்களுக்கு என்று சொந்த வீடு இல்லாத இந்த கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகாலம் சஞ்சரிப்பார்கள். பொதுவாகக் கிரகங்கள் கடிகார சுழற்சி திசையிலலும் (Clockwise) ராகு கேதுக்கள் எதிரி கடிகார சுழற்சி திசையிலும் (Anti Clockwise) நகர்வார்கள். சர்ப்ப கிரகங்களாகக் கருதப்படும் ராகுவும் கேதுவும் பாப கிரகங்களாகக் கருதப்படுவன. என்றாலும் அவர்கள் சஞ்சாரம் செய்யும் ராசியைக் கருத்தில்கொண்டு பலன் கொடுப்பார்கள். அந்த வகையில் ராகு வேகமாகனவர் என்றால் கேது கொஞ்சம் நிதானமானவர். கேதுவை ஞானகாரகன் என்பார்கள். காரணம், ஒருவரின் ராசிக்குள் கேதுவந்தால் அவர் விலகும் முன் வாழ்க்கை என்றால் என்ன என்னும் பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிடுவார். ஒருவரது குலம் செழித்தோங்கித் திகழவேண்டும் எனில், அவருக்கு, கேதுவின் திருவருள் பரிபூரணமாக வேண்டும்.

ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

இத்தகைய ராகுவும் கேதுவும் தற்போது மீனத்திலும் கன்னியிலும் சஞ்சாரம் செய்துவருகிறார்கள். வாக்கியப்பஞ்சாங்கப்படி வரும் ஏப்ரல் 28 ம் தேதியும் திருக்கணிதப்படி மே 15 ம் தேதியும் இருவரும் பெயர்ச்சி ஆகிறார்கள். அதன்பின் கும்பராசியில் ராகுவும் சிம்மராசியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். சனிப்பெயர்ச்சி எவ்வளவு முக்கியமோ அந்த அளவு ராகு கேது பெயர்ச்சியும் முக்கியம். கேது அமரும் இடத்தை அறிந்து அதற்கேற்ற வழிபாடுகளைச் செய்தால் நற்பலன்களைப் பெறலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

கேதுவின் அருளைப்பெற நாம் வழிபட வேண்டிய தெய்வம் விநாயகப்பெருமான். விநாயகரை எவர் ஒருவர் முறையாக வணங்கிணால் அவருக்குக் கேதுவினால் உண்டாகும் கெடுபலன்கள் இல்லாமல் போகும். நற்பலன்கள் பெருகும். அந்த அடிப்படையில் 12 ராசிக்காரர்களும் எப்படிப்பட்ட விநாயகர் வழிபாடுகள் குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதரிடம் கேட்டோம்.

மேஷம் : ராசி மண்டலத்தில் முதல் இடமாகக் கருதப்படும் மேஷ ராசியில் முதல் நட்சத்திரம் அஸ்வினி. இதுவே கேதுவின் சாரம் பெற்ற நட்சத்திரம். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு கேது பெரும்பாலும் நன்மையையே செய்வார். நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சியில் கேதுபகவான் மேஷத்துக்கு 5 ம் இடமான சிம்மத்தில் அமர இருக்கிறார். 5 ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்தக் காலகட்டத்தில் மேஷ ராசி அன்பர்களுக்கு அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் தொடர்பும், அவர்களால் முன்னேற்றமும் கிடைக்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்ந்துகொள்வீர்கள். யாரெல்லாம் பூர்விக இடத்தை விட்டு வேறு இடம் மாறி வாழ்கிறார்களோ அவர்கள் எல்லாம் மேன்மை அடைவார்கள். பிற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் கேது சாதகமாக இருப்பதால் எதையும் வெல்லும் தைரியம் மனதில் உண்டாகும்.

மேஷராசிக்காரர்கள் ஜேட் (Jade) என்னும் பச்சைக்கல்லால் செய்யப்பட்ட விநாயகரின் சிறிய விக்ரகத்தை வாங்கிப் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை காணிப்பாக்கம் சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் எல்லா வளமும் நலமும் உண்டாகும்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நிகழும் பிற பெயர்ச்சிகள் சாதகமாக உள்ள நிலையில் கேது 4 ம் இடத்தில் அமர்வதையும் நோக்கவேண்டும். 4 ம் இடம் மாத்ரு ஸ்தானம். எனவே தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வேலை நிமித்தமாகத் தாயைப் பிரிந்துசெல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். சிலருக்கு எதிலும் ஆர்வமற்ற தன்மை காணப்படும். என்றாலும் மாணவர்கள் முயன்று படித்தால் சாதிக்கும் சக்தி பிறக்கும். குறிப்பாக மருத்துவப் படிப்பை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதில் சாதிக்க முடியும். சின்னச் சின்ன இடர்பாடுகளைத் தரும் இந்த கேதுப் பெயர்ச்சியில் நற்பலன்களைப் பெற ஸ்படிகத்தால் செய்த விநாயகரை பூஜை அறையில் வைத்து வழிபடுவது அவசியம். முடிந்தால் யாரேனும் அடியவர்களுக்கு ஸ்படிக விநாயகர் வாங்கி தானம் கொடுங்கள். சதுர்த்தி திதியில் ஸ்படிக விநாயகருக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். அபிஷேகப் பாலை அருந்திவர கேதுவால் உண்டாகும் துன்பங்கள் தீரும். மேலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் ஏதேனும் ஒருநாளில் பிள்ளையார்பட்டி சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் சகல வளங்களும் உண்டாகும்.

பிள்ளையார்பட்டி பிள்ளையார்

மிதுனம் : ராசிக்கு 3-ம் இடமான சிம்மத்தில் கேது அமர்வது மிதுன ராசிக்காரர்களுக்கு பெரும் தைரியத்தைக் கொடுக்கும். 'மூன்றில் கேது முடிசூட வைப்பார்' என்கிறது ஒரு ஜோதிடப் பழமொழி. நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மற்றவர்களை மிகச் சரியாக வேலைவாங்குவீர்கள். செயல்களைத் திறம்பட முடித்து நற்பெயர் பெருவீர்கள். ஆரோக்கியமும் மேம்படும். செல்வச்சேர்க்கை உண்டு. சுற்றியிருப்பவர்களால் நன்மையே நிகழும். இப்படிப்பட்ட மிதுனராசிக்காரர்கள் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் சிறிய அளவிலான ஏதேனும் ஒரு விநாயகப்பெருமானின் விக்ரகத்தை வாங்கி வீட்டில் வைத்துப் பூஜை செய்துவாருங்கள். பிற கிரகங்களால் உண்டாகும் கெடுபலன்களும் குறையும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் சென்று அங்கு அருள்பாலிக்கும் முக்குறுணி விநாயகரை வழிபடுங்கள். வாழ்வில் சகல நலன்களும் உண்டாகும்.

கடகம் : ராசிக்கு 2 -ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேதுவருகிறார். இப்போது நீங்கள் சொல்லும் சொற்களுக்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். நல்லது பேசினால் நன்மைகள் குவியும். குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் பேச்சினால் இவர்கள் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். எனினும், மனச்சாட்சிப்படி நடந்துகொண்டதற்காகப் பெருமிதம் அடையும் பண்பாளர்களாக விளங்குவார்கள். முன்கோபத்தைத் தவிர்க்கவேண்டிய நேரமிது. பண விஷயங்களிலும் மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் கை எழுத்துப்போட்டுக் கடன் வாங்கித் தரவேண்டாம். சந்திரனை அதிபதியாகக்கொண்ட கடகராசிக்காரர்களுக்கு விநாயகர் வழிபாடே சகல பிரச்னைகளுக்கும் தீர்வு. குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது அற்புத பலன்களைத் தரும். கருங்கல்லால் ஆன சிறிய விநாயகர் விக்ரகத்தை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வாருங்கள். வாய்ப்பு கிடைக்கும்போது அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று அவருக்கு அபிஷேகம் நடப்பதை தரிசனம் செய்யுங்கள். வாழ்வில் எல்லா நலமும் உண்டாகும். இந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் சந்திர கிரகண நாளில் ஏழைகளுக்கு தானங்கள் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும்.

சிம்மம் : உங்கள் ராசிக்குள்ளேயே கேது வருகிறார். முன்னேற்றங்களில் சிற்சில தடைகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என்கிற கவலையும் ஏக்கமும் வந்துபோகும். ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. எனினும் சித்தர்கள், மகான்கள் ஆகியோரின் ஆசியும் வழிகாட்டுதலும் கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குச் செல்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சூரிய கிரகண நாள்களில் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபடுவது மிகச்சிறந்த பரிகாரமாக சிம்மராசிக்காரர்களுக்குத் திகழும். வெள்ளெருக்கு விநாயகரை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். வாய்ப்புகிடைக்கும்போது பாண்டிச்சேரி மணக்குள விநாயகரை தரிசித்துவாருங்கள். தடைகள் விலகி வெற்றிகள் குவியும்.

கன்னி : ராசிக்கு 12 ம் வீட்டில் கேது அமர்கிரார். இதுவரை இருந்த மனபாரங்கள் குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு வந்துசேரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். தொல்லை தந்தவர்கள் விலகிப்போவார்கள். ஆரோக்கியமும் மேம்படும். என்றாலும் தூக்கம் கெடும். வீண் செலவுகளும் அதிகரிக்கும். சில நேரங்களில் விட்டேத்தியான மனநிலை ஏற்படும். கோயில் குளங்களுக்குச் செல்வது விருப்பமாக இருக்கும். எல்லாம் இறைவன் செயல் என்னும் மனநிலை ஏற்படும். இன்பங்களின் மீது நாட்டங்கள் குறையும். கன்னி ராசிக்காரர்கள் சிறிய அளவிலான வன்னி மரத்தால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட்டுவாருங்கள். வன்னி மரம் தலவிருட்சமாகக் கொண்ட ஆலயங்களுக்குச் செல்லுங்கள். வன்னிமரத்தின் கீழ் அருளும் விநாயகருக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள். விநாயகரின் நாமத்தைச் சொல்லி வழிபட வழிபட மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் இன்பம் தங்கும்.

காணிப்பாக்கம் கணபதி

துலாம் : லாப ஸ்தானத்தில் கேது அமர்ந்து துலா ராசிக்காரர்களுக்குக் கொட்டிக்கொடுக்கப் போகிறார். நினைத்தது நிறைவேறும். தொட்டது துலங்கும். யானைபலம் பிறக்கும். சுபகாரியங்கள் கூடிவரும். பகைவர்கள் ஓடி ஒளிவார்கள். எதையும் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். இன்னும் பற்பல நன்மைகள் கிடைக்கும். மேலும் நற்பலன்கள் கிடைத்து மென்மேலும் வாழ்வில் உயர விநாயகர் வழிபாடு உதவும். இவர்கள் பூஜை அறையில் சிறிய அளவில் வெள்ளி அல்லது ஜேட் என்னும் பச்சைக்கல்லில் செய்ய விநாயகரை வாங்கி வழிபட்டுவர தொல்லைகள் விலகும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை திருநெல்வேலியில் அருளும் உச்சிஷ்ட கணபதியை வணங்கி வர வளமும் நலமும் பெருகும்.

விருச்சிகம் : 10 ல் கேது வருவது பெரும் பாதிப்பு என்று சொல்லமுடியாது என்றாலும் தேவையற்ற ஆணவம் தலைதூக்கும். செய்யும் தொழிலில் வேலையில் தான்தான் பெரியவர் என்ற எண்ணம் வரும். வேலை இடத்தில் தேவையற்ற விவாதங்களை வளர்க்க வேண்டாம். அதிகாரிகளிடம் அடங்கிப்போங்கள். அதிகாரத்தில் உங்களுக்குக் கீழ் உள்ளவர்களை மதிப்புடன் நடத்துங்கள். இல்லை தேவையில்லாத சிக்கல்களில் மாட்டுவீர்கள். சிலருக்குப் பணி மாற்றமும் ஏற்படலாம். எதுநடந்தாலும் அது நல்லதற்கே என்ற எண்ணத்தோடு வாழப்பழகுங்கள். வீட்டில் பளிங்குக் கல்லால் ஆன சிறிய விநாயகரை வாங்கி வைத்து வழிபட்டுவாருங்கள். ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் விருச்சிகப் பிள்ளையாரை வழிபட்டு வாருங்கள் வாழ்க்கை வளமாகும்.

தனுசு : பாக்கிய ஸ்தானத்தில் கேது அமர்வது உங்களுக்கு அற்புத பலன்களையே கொடுக்கும். பணவரவு உண்டாகும். என்றாலும் தந்தைவழியில் இருந்த மனஸ்தாபங்கள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பூர்வீகச் சொத்துகள் விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும் என்பது ஆறுதலான விஷயம். தனுசு ராசிக்காரர்கள் சிறிய அளவிலான வெள்ளியில் செய்த விநாயகரை வாங்கி பூஜை அறையில் வைப்பது மிகவும் விசேஷம். வாய்ப்புள்ளவர்கள் திருச்சி உச்சிப்பிள்ளையாரை வழிபட்டு வாருங்கள். வயது முதிர்ந்தவர்கள் மலையேற முடியாதவர்கள் மலையடிவாரத்தில் கோயில்கொண்டிருக்கும் மாணிக்க விநாயகரை தரிசித்து வாருங்கள். வாழ்வில் உள்ள பிரச்னைகள் தீரும். வசந்தக் காற்று வீசும்.

மகரம் : அஷ்டம கேது அவ்வளவு நற்பலன்களைத் தராது. போட்டி பந்தயங்களில் சின்னச் சின்னத் தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். யாரையும் நம்பிப் பணத்தை முதலீடு செய்யக்கூடாது. மௌனம் சர்வார்த்த சாதகம் என்னும் வரியை வாழ்வில் மந்திரம்போல் கடைபிடியுங்கள். உடல் நலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். சனியின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிக்காரர்கள் கருங்காலியில் செய்த விநாயகரை வாங்கிப் பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் சிதம்பரத்துக்கு அருகில் இருக்கும் திருநாரையூருக்குச் சென்று அங்கு அருளும் பொள்ளாப் பிள்ளையாரை வழிபட்டுவாருங்கள். இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கும். வாழ்க்கை மிகவும் அமைதியும் ஆனந்தமும் நிறைந்ததாகத் திகழும்.

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்.!
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்.!

கும்பம் : ஏழில் கேது உங்கள் வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற வாக்குவாதத்தை ஏற்படுத்துவார். எனவே அனுசரித்துச் செல்வது நல்லது. திருமணம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குத் தாமதமாகும். என்றாலும் முயற்சிகளில் மேன்மை ஏற்படும். வழிபாடுகளில் மனம் செல்லும். விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள முயல்வீர்கள். பரபரப்பைக் குறைத்து சிந்தித்துச் செயல்படுவது அவசியம். இவர்களும் கருங்காலி விநாயகரை வாங்கி வைத்து வழிபடவேண்டும். சதுர்த்தி நாளில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்துக்குச் சென்று 11 தேங்காய்களைக் கோத்து மாலையாகப் போட்டு வழிபட்டு வாருங்கள். வாய்ப்பிருப்பவர்கள் தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகரை ஒருமுறை தரிசித்து வாருங்கள். குடும்பத்தில் இனிமையும் அமைதியும் குடிகொள்ளும்.

மீனம் : ஆறாம் இடத்தில் கேது இருக்க எதிரிகளை வெல்லும் ஆற்றல் பிறக்கும். இவர்கள் எதைச் செய்தாலும் வெற்றிதான்; தொட்டது துலங்கும் பாக்கியம் உண்டு. கடன் இல்லாத வாழ்க்கை இவர்களுக்கு வரப்பிரசாதம். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. சிலருக்கு, வெளிநாட்டுக்குச் சென்று வேலைபார்க்கும் சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். குருவின் ஆதிக்கத்தில் பிறந்த மீனராசிக்காரர்கள் மேலும் நற்பலன்கள் அதிகரிக்க வீட்டில் மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுவது சிறப்பு. ஸ்படிக விநாயகரை பூஜை அறையில் வைத்து வழிபட்டாலே நன்மைகள் பெருகும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் தாமரை மலர்மேல் அமர்ந்து கரும்புடன் காட்சி தரும் கற்பக விநாயகரை தரிசனம் செய்துவாருங்கள். எல்லா வளமும் நலமும் சேரும்.

சனிப்பெயர்ச்சி 2025 | Sani Peyarchi palan | Mithunam, Thulam, Magaram - சொல்லியடிக்கும் ராசிகள்

2025 - ம் ஆண்டு நிகழும் சனி பெயர்ச்சி பலன் மிதுனம், துலாம் மற்றும் மகரம் ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி விரிவாகப் பேசுகிறார் பஞ்சநாதன். மேலும் பார்க்க

Weekly Horoscope: வார ராசி பலன் 9.3.25 முதல் 15.3.25 | Indha Vaara Rasi Palan | இந்த வாரம் எப்படி?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். மேலும் பார்க்க

Sani Peyarchi 2025 சிம்மம் - கன்னி - தனுசு ராசிகளுக்கு என்ன பலன் | Dr.பஞ்சநாதன்

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி 2025, மார்ச் 29 - ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மீன ராசியில் அடி எடுத்துவைக்கிறார். இந்த மாற்றம் சிம்மம், கன்னி, ... மேலும் பார்க்க