செய்திகள் :

TN Budget 2025: பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வரவேற்பும் விமர்சனங்களும்

post image

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.

பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பட்ஜெட் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், " முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் புவி வெப்பமயமாதலின் தாக்கம் தீவிரமான பொருளாதார பாதிப்புகளை இந்தியாவில் ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதிநிலை தொடர்பாக நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில் ’காலநிலை மாற்றம்’ என்கிற வார்த்தையே இல்லாமல் இருந்தது பேரதிர்ச்சியாக இருந்தது.

மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டிருப்பதை பூவுலகின் நண்பர்கள் சார்பில் வரவேற்கிறோம்.

மேலும், நேற்று வெளியான தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கையில் காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளை சுட்டிக்காட்டியிருப்பது இவ்வரசு காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தை மிக முக்கியமான பிரச்சினையாகக் கருதுவதை வெளிக்காட்டுகிறது.

வரும் 2030 ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றலை உருவாக்கிட அரசு செயல்திட்டங்கள் வகுத்து வருவதும் விரைவில் ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கை (Integrated Renewable Energy Policy) வெளியிடப்படும் என்கிற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. இதன் மூலம் அதிக மாசு ஏற்படுத்தும் மற்றும் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கவல்ல புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும். 2025-26 ஆம் ஆண்டில் மணிக்கு 4,000 மெகாவாட் திரன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage System) உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை நாள் முழுவதும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உருவாகும் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை இது ஊக்குவிக்கும்.

அதேநேரத்தில் பசுமை ஆற்றலை அதிகரிக்கிறோம் என்கிற பெயரில் உயிர்ப்பன்மையம் நிறைந்த மற்றும் நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடிய பகுதிகளில் நீரேற்றுப் புனல் மின் நிலையங்களை அமைப்பது தவிர்க்க வேண்டியதாகும். இந்நிதிநிலை அறிக்கையில் வெள்ளிமலையில் 1,100 மெகாவாட் மற்றும் ஆழியாறு பகுதியில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் திட்டங்கள் மொத்தம் ரூ. 11,721 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் என்கிற அறிவிப்பை பூவுலகின் நண்பர்கள் சார்பில் கண்டிக்கிறோம்.

புனல் மின் உற்பத்தியைப் பொருத்தமட்டில் பருவமழையால் அணைகளுக்குக் கிடைக்கும் நீர்வரத்தைப் பொறுத்தே மின் உற்பத்தி அமையும். 2023-24-ஆம் ஆண்டில் பருவமழை குறைந்த காரணத்தால் முக்கிய நீர்த்தேக்கங்களுக்கான நீர் வரத்து சராசரி அளவிற்கும் குறைவாக இருந்தது. இதனால் 3.707.63 மில்லியன் யூனிட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், அவ்வாண்டிற்கான இலக்காக மத்திய மின்சார ஆணையம் 4220 மில்லியன் யூனிட் நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கெனவே 11 நீரேற்றுப் புனல் மின் நிலையங்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் இத்திட்டங்களைக் கைவிட வேண்டும்.

உலக நாடுகள் அனைத்தும் கைவிட்டு வரும் ஒரு தொழில்நுட்பம்தான் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலைகள் திட்டம். இது அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய மற்றும் குப்பை மேலாண்மைக்கான ஒரு போலீத் தீர்வாகும். மிகத் தீவிரமான சுற்றுச்சூழல் மாசுபாடை ஏற்படுத்தும் இக்குப்பை எரியுலைத் திட்டம் சென்னையிலும் தாம்பரத்திலும் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு மிகவும் ஆபத்தானதாகும். குறிப்பாக சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 21 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட குப்பை எரிவுலை ஒன்றையும் தாம்பரத்தில் 15 முதல் 18 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட ஒரு குப்பை எரிவுலையும் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை செயல்படுத்தக் கூடாதெனக் கோருகிறோம். அதிக கார்பனை உமிழும் குப்பை எரிவுலைகள் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்ற எதிர் நடவடிக்கைகளுக்கு முரணானவை.

1500 கோடி மதிப்பீட்டில் அடையாறு நதி மீட்பு, சென்னை பெருநகர்ப் பகுதியில் ரூ. 88 கோடி மதிப்பீட்டில் 7 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 4,375 ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 16 டி.எம்.சி. கொள்ளளவில் ஆண்டுக்கு 2.25 டி.எம்.சி. அளவிற்கு வெள்ள நீரைச் சேமிக்கும் வகையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக சென்னை நகரம் பருவமழை பொய்க்கும் காலங்களில் கடும் வறட்சியைச் சந்திக்கும் அபாயம் கொண்டது. இந்நிலையைச் சமாளிக்க புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்கி வெள்ள நீரைச் சேமிப்பது, நிலத்தடி நீர்வளத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது வறட்சி காலத்தில் நகரின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய உதவும்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து உருவாகும் கழிவுநீர் ஆற்றில் நேரடியாகக் கலப்பதைத் தடுக்கும் பொருட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் 52 ஏக்கரில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் மாசுபாடைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையும் நீலகிரி மாவட்டத்தில் கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியைக் கருத்தில் கொண்டும் இந்த 52 ஏக்கர் பகுதியை நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக மாற்றும் சாத்தியங்களை அரசு ஆராய வேண்டும்.

காலநிலை மாற்றம்

கடலோர சூழல் அமைவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ரூ. 50 கோடி தொடக்க நிதியுடன் கடல்சார் வள அறக்கட்டளை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலையாத்திக் காடுகள், மணற்குன்றுகள், நீர்ச்சுனைகள் ஆகியவற்றைப் பாதுகாத்து கடல் அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வைத் தடுக்கும் பணிகளுக்கு இந்த அறக்கட்டளை மிகவும் பயனுள்ளதாக அமையும். உள்ளூர் மீனவர்களின் பங்களிப்போடு இவ்வறக்கட்டளை செயல்படும் பட்சத்தில் கூடுதல் பலனளிக்கும்.

அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுடன் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் போன்ற வேட்டைப்பறவைகளைப் பாதுகாக்கவும் அவை வசிக்கும் வாழிடங்களைப் பாதுகாக்கவும் இந்த ஆராய்ச்சி மையம் மிகவும் உதவியாக அமையும்.

தனுஷ்கோடியில் பூநாரை பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் மட்டுமே பூநாரைகள் இங்கு காணப்படும் என்றாலும் இங்குள்ள மணல் திட்டுகள், சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலக் காடுகள் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு வகையான பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் காணப்படும் பகுதியாக உள்ளது. பங்குனி ஆமைகள் கூட இப்பகுதிகளில் முட்டையிடுகின்றன. இப்படிப் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாக விளங்கும் இப்பகுதி ஏற்கெனவே பொறுப்பற்ற சுற்றுலா நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பறவைகள் சரணாலய அறிவிப்பு மிகவும் மிக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் மேல்செங்கம் பகுதியில் 1,000 எக்டர் பரப்பளவில் அழிந்து வரும் நாட்டின மரங்களையும் உயிர்ப்பன்மையத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர்ப் பூங்கா உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து

சென்னைக்கு 950, கோயம்புத்தூருக்கு 75, மதுரைக்கு 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2,000 வழித்தடங்களில் சிற்றுந்துத் திட்டம், தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும் கலங்கரை விளக்கம் – உயர்நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் மூலம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் அரசு காட்டும் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது. இதன் மூலம் காற்று மாசுபாடு பெருமளவில் குறையும்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இத்திட்டத்தால் நீர்நிலைகளும் வேளாண் நிலங்களும் அழியும். சென்னையின் வெள்ள அபாயத்தை அதிகரிக்கவல்ல இத்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனக் கோருகிறோம்.

பேரிடர் மேலாண்மை:

வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்ள சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட 11 நகரங்களுக்கென வெப்ப அலை செயல்திட்டங்கள் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின்கீழ் அதிநவீன வசதிகளுடன் கூடிய தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஒன்று ரூ. 50 கோடி மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேரிடர்களை எதிர்கொண்டு வரும் நிலையில் முன்னோடியாக எடுக்கப்பட்ட இம்முயற்சி பேரிடர் தாக்கத்தைக் குறைக்க உதவும். இந்நிறுவனத்துடன் அண்ணா பல்கலையில் செயல்பட்டு வரும் Climate Studioவையும், Indian Institute of Tropical Meteorology யையும் இணைத்துக் கூட்டு முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

பழங்குடியினரின் மரபுசார் அறிவினைப் பாதுகாத்து, பயன்படுத்தி, பல்லுயிர்ப் பெருக்கத்தோடு கூடிய ‘பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கை; உருவாக்கப்படும் என்கிற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

சென்னைக்கு அருகில் 2000 ஏக்கரில் ஒரு புதிய நகரம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே அதிகளவு வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் நீர்நிலைகளுக்குப் பாதிப்பில்லாமல் பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவது சாத்தியமற்றது என்பதால் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இதைச் செயல்படுத்துவது குறித்து ஆராய வேண்டும் எனக் கோருகிறோம்.

நீலகிரி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களின் 1200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மலைப் பகுதிகளுக்கான முழுமையான வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை உருவாக்கும்போது நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளைக் கூடுதல் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆய்வு நிலையத்தின் அறிக்கை, வட கிழக்குக் கடலோரப் பகுதிகள் தீவிர வானிலை நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை எனவும், வடகிழக்குப் பருவமழையின்போது, பெருவெள்ளம், சூறாவளி, கடல் மட்டம் உயர்வு, நீண்ட நாள்களுக்கு நீர் தேங்குவதால் விவசாயத்தில் ஏற்படும் கடும் சேதம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளதைப் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அனைத்து துறை சார்ந்த திட்டங்களையும் காலநிலை மாற்ற கண்ணோட்டத்தோடு செயல்படுத்த வேண்டும்.

பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் அடங்கிய இந்த நிதிநிலை அறிக்கையைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். அதேநேரத்தில் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில அறிவிப்புகளும் இந்நிதிநிலை அறிக்கையில் உள்ளன. அவற்றை அறிவியல் மனப்பாங்குடன் அணுகி மறுபரிசீலனை செய்யவேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கின்றனர்

'காசஸாவிற்கு ஆதரவாக போராட்டம்... விசா ரத்து' - நாடு திரும்பிய இந்திய மாணவி; ட்ரம்ப் அரசின் கெடுபிடி!

"இனி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் யாரும் சட்டத்திற்கு விரோதமான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட்டால், வெளிநாட்டு மாணவர்கள் சிறையிலிடப்படுவார்கள்... அல்லது அவர்... மேலும் பார்க்க

TVK : 'பாளையங்கோட்டைனா சஜிதானே...' - நெருக்கமான மாவட்டச் செயலாளர் மரணம்; சோகத்தில் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி என்பவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்திருக்கிறார். சஜி, விஜய் தனியே அழைத்து பேசக்கூடிய முக்கிய நிர்வாகி. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ... மேலும் பார்க்க

``அதை செங்கோட்டையன் அவர்களிடம் சென்று கேளுங்கள்..! " - எடப்பாடி பழனிசாமி பதில்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. சமீபமாகவே அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக... மேலும் பார்க்க

PM SHRI: பி.எம் ஸ்ரீ திட்டத்தில் பாஜக - திமுக மோதல் ஏன்... மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன?!

Tபி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கும், மாநில திமுக அரசுக்குமான போர் தீவிரமடைந்திருக்கிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒதுக்குவே... மேலும் பார்க்க

Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிளப்பும் பவன் கல்யாண்

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து நேற்றைய தினம் ஜன சேனா கட்சியின் தலைவரும் , ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் பேசிய விஷயம் இணை... மேலும் பார்க்க