Sourav Ganguly: அதிரடி போலீஸ் கெட்டப்பில் டாடா... வெப் சீரிஸில் நடிக்கிறாரா சௌரவ...
கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை... இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக்கை சொல்வது என்ன?
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து ’Rethinking Affirmative Action for Muslims in Contemporary India’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத சிறுபான்மையினரின் பொருளாதார அவலநிலை குறித்துப் பேசும் இந்த அறிக்கை, அவர்களின் பிற்பட்ட நிலையைப் போக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் தாக்கம் குறித்தும் தெரிவிக்கிறது.
இஸ்லாமியர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக சில மாநில அரசுகளால் எடுக்கப்படும் முயற்சிகளைக் கூட சில வலதுசாரிகள் எதிர்த்துள்ளனர். அரசியல் ரீதியாக 'இஸ்லாமியர்களைத் திருப்திப்படுத்துவதற்கான' முயற்சி என விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மன்மோகன் சிங் காலம்
2006ம் ஆண்டு நீதிபதி ராஜீந்தர் சச்சார் குழு அறிக்கை வெளியானபிறகு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் துரதிர்ஷ்டவசமான இஸ்லாமியச் சமூகத்தின் அவலநிலையை மாற்றுவதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
நாட்டின் வளர்ச்சியால் கிடைக்கும் பலன்கள் மத சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கும் சமமாகச் சென்றடைய வேண்டும் என அவர் விரும்பினார்.
மன்மோகன்சிங் சிறுபான்மையினருக்கான திட்டங்கள்,கொள்கைகளை உள்ளடக்கிய 15 அம்ச பெருந்திட்டத்தை முன்வைத்தார். மத்திய சிறுபான்மை நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினர் முன்னேற்றத்துக்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஆனால் 2014ம் ஆண்டு இஸ்லாமியர்களின் நிலையை மாற்றுவதற்கான மன்மோகன் சிங்கின் முயற்சிகள் தேர்தலில் அவருக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. "நமது வீட்டில் அம்மா, சகோதரிகளிடம் உள்ள செல்வத்தைக் காங்கிரஸ் அரசாங்கம் கணக்கெடுத்து, மதிப்பீடு செய்து மன்மோகன் சிங் கூறும் மக்களுக்கு அதை விநியோகித்து விடுவார்கள். அவர், நாட்டின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உள்ளதாகக் கூறியிருக்கிறார்" எனப் பிரசாரம் செய்தார் மோடி.
அறிக்கை கூறுவது என்ன?
டெல்லியில் உள்ள Centre for the Study of Developing Societies-ஐ சேர்ந்த ஹிலால் அகமது, முகமது சஞ்சீர் ஆலம் மற்றும் Policy Perspectives Foundationஐ சேர்ந்த நசீமா பர்வீன் ஆகியோர் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

பா.ஜ.க அரசில் இஸ்லாமியர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய கூறுகளில் இஸ்லாமியர்களின் நிலையை இந்த அறிக்கை விளக்குகிறது. இந்தியாவில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தவர்களில், உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் விகிதம் இஸ்லாமியர்களில் மிகவும் குறைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இஸ்லாமியர்கள் உயர்கல்வியில் சேருவது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும் தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை, மருத்துவம் போன்ற படிப்புகளை இஸ்லாமியர்கள் மிகவும் அரிதாகவே தேர்வு செய்யும் சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
தனியார்ப் பள்ளிகளில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுவதில் இஸ்லாமியர்களின் நிலை, பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடிகளை விடச் சற்று மேம்பட்ட நிலையில் உள்ளது.
நிலையான ஊதியம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்கள் சேருவது சமீபத்தில் அதிகரித்திருக்கிறது. அதே நேரம் மூளை உழைப்பு மட்டுமே தேவைப்படும் வேலைகளைப் பெறுவதில் இந்து மதத்தின் முற்பட்ட வகுப்பினருடன் ஒப்பிடுகையில் இஸ்லாமியர்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.
சொத்துகள் வைத்திருப்பதிலும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் பின்தங்கியே இருக்கிறனர். இஸ்லாமியர்களின் நிலையை மாற்ற 7 சீர்திருத்தங்களை இந்த அறிக்கை முன்வைக்கிறது.
7 சீர்திருத்தங்கள்!
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும். மாறாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அனைத்து மதங்களிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களை உள்ளடக்கியதாக மாற்றப்பட வேண்டும்.
பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு தலித் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்ச வரம்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் மேலும் சில சமூகங்களை இணைக்க இடம் அளிக்கப்பட வேண்டும்.
மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 112 மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான நிதி ஆயோகின் திட்டத்தில் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டும். இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடும் வேலைகளில் உள்ள பிரச்னைகளைக் களைவதற்கான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
இஸ்லாமியர் நிலையை மேம்படுத்துவதற்கான விவாதங்களில் தனியார்த் துறையினரும் இணைக்கப்பட வேண்டும்.
இஸ்லாமியச் சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks