``ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்" - உச்ச நீதிமன்றம்
அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016 - 2021) தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு மூன்று கோடி ரூபாய் வரை சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக ரவீந்திரன் என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியை 2022, ஜனவரி 5-ம் தேதி தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் புகாரளித்திருந்த ரவீந்திரன், ``ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைவாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அதை செய்யத் தவறிவிட்டது. எனவே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பின்னர், இதற்கெதிராக ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு அரசு சார்பாகவும், ``ஏற்கனவே இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட விட்டது. ராஜேந்திர பாலாஜியை மேலும் விசாரணைக்கு உட்படுத்த ஆளுநரிடம் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறோம். எனவே இந்த நேரத்தில் சிபிஐ விசாரணை தேவையற்றது" என்று கூறி தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ``ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு கொடுத்த விண்ணப்பங்களின் மீது ஆளுநர் ஏன் முடிவெடுக்காமல் இருக்கிறார்" எனக் கடுமையாகக் கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், ``ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, ஆளுநர் செயலாளர் மார்ச் 14-ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ``ஆளுநர் தரப்பில் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதா?" என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள், ``கடந்த 11-ம் தேதி மாநில அரசுக்கு ஆளுநர் மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், 400 பக்கங்களைக் கொண்ட வழக்கு தொடர்பான ஆவணங்களின் விவரங்களை மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். முதலில் வழக்கின் முக்கிய ஆவணங்களை மட்டும் மொழிபெயர்த்துத் தந்தால் போதும் என ஆளுநர் சொல்லியிருந்தார். இப்போது அனைத்தையும் அவர் கேட்கிறார்" எனத் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள், ``இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் வழக்கின் விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவது போல இருக்கிறது" என்று கூறினர்.

அதைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர், ``இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை விசாரணையை நடத்தி முடித்து விட்டார்கள். பிறகு மீண்டும் சிபிஐ விசாரணை என்பது தேவையற்றது" என்று வாதாட, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்களும் அதே வாதத்தை முன்வைத்தார்கள். இறுதியில் நீதிபதிகள், ``ஆளுநர் கேட்ட ஆவணங்களை அடுத்த இரண்டு வாரத்துக்குள் தமிழ்நாடு அரசு அவருக்கு வழங்க வேண்டும். அதன்பிறகு, ஆளுநர் உடனடியாக இதில் முடிவெடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் சிபிஐ எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது" என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks