Aurangzeb: "பட்னாவிஸ் ஒளரங்கசீப்பைப் போல..." - காங். தலைவர் பேச்சு; மகாராஷ்டிராவில் வெடித்த சர்ச்சை
மொகலாய மன்னர் ஔரங்கசீப் தனது கடைசிக் காலத்தில் மகாராஷ்டிராவில்தான் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் தற்போது சாம்பாஜி நகர் மாவட்டத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக எழுந்துள்ளது. இக்கோரிக்கைக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை மொகலாய மன்னர் ஔரங்கசீப்புடன் ஒப்பிட்டுப் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், "ஔரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர். அவர் தனது சொந்த தந்தையையே சிறையில் அடைத்தார். அதோடு எதற்கெடுத்தாலும் மதத்தைக் கையில் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இன்றைக்கு ஔரங்கசீப்பிற்கு நிகரான கொடூரமான ஆட்சியாளராக பட்னாவிஸ் இருக்கிறார். பட்னாவிஸ் எப்போதும் துணைக்கு மதத்தை இழுக்கிறார். எனவே நிர்வாகத்தில் ஔரங்கசீப்பும், பட்னாவிஸும் ஒன்றுதான்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
மாநில காங்கிரஸ் தலைவரின் கருத்து குறித்துப் பேசிய மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே, "ஹர்ஷ்வர்தனின் கருத்து குழந்தைத்தனமானது. பொறுப்பற்றது. மகாராஷ்டிரா அரசியல் கலாசாரத்தைக் களங்கப்படுத்தும் செயல். தேவேந்திர பட்னாவிஸை ஔரங்கசீப்புடன் ஒப்பிட்டதன் மூலம் மகாராஷ்டிராவைக் காங்கிரஸ் அவமதித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சமாஜ்வாடி கட்சியின் மும்பை எம்.பி.அபு ஆஸ்மி அளித்திருந்த பேட்டியில், "ஔரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார். அதோடு அவர் கொடூரமான ஆட்சியாளர் கிடையாது. சத்ரபதி சாம்பாஜிக்கும், ஔரங்கசிப்பிற்கும் இடையே நடந்த போர் மாநில நிர்வாகத்திற்கானது. அது இந்து, முஸ்லிம் சண்டை கிடையாது. ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தில் இந்திய எல்லை ஆப்கானிஸ்தான் எல்லை வரை நீண்டிருந்தது. இந்தியாவின் வளர்ச்சியும் 24 சதவீதமாக இருந்தது'' என்று குறிப்பிட்டிருந்தார்.
ஔரங்கசீப் கல்லறைக்குப் பாதுகாப்பு
மகாராஷ்டிராவின் குல்தாபாத் என்ற இடத்தில் ஔரங்கசீப் கல்லறை இருக்கிறது. இக்கல்லறையை இடிக்கப் போவதாக வலதுசாரி அமைப்பு தெரிவித்துள்ளது. அதோடு இன்றைக்கு ஔரங்கசீப் கல்லறைக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து கல்லறை இருக்கும் சாம்பாஜி நகர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்லறை இருக்கும் குல்தாபாத்திற்குச் செல்லும் வானங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கல்லறைக்கு நேரடியாகச் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஔரங்கசீப் கல்லறைக்கு 24 மணி நேரமும் 6 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து குல்தாபாத் இன்ஸ்பெக்டர் தனஞ்சே கூறுகையில், "அடுத்த உத்தரவு வரும் வரை ஔரங்கசீப் கல்லறைக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கல்லறையைச் சுற்றி ரிசர்வ் போலீஸ் படையும் குவிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
சிவசேனா(உத்தவ்) தலைவர்களில் ஒருவரான அம்பாதாஸ் தன்வே இது குறித்துக் கூறுகையில், "மாநில அரசு இவ்விவகாரத்தில் மக்களை முட்டாளாக்குகிறது. மத்திய அரசின் தொல்லியல் துறைதான் பணம் செலவு செய்து அதனைப் பராமரித்து வருகிறது. அதேசமயம் மாநில அரசு அதனை இடிக்கத் தூண்டுகிறது'' என்றார்.
இது குறித்து ஜல்னா காங்கிரஸ் எம்.பி கல்யான் காலே கூறுகையில், ''உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஔரங்கசீப் கல்லறை பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. கல்லறை பல ஆண்டுகளாக அங்கு இருக்கிறது. இப்போது தேர்தல் நெருங்குவதால் இதனை எழுப்புகின்றனர்'' என்றார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks