மாா்ச் 25,26இல் பாா்வையற்றோருக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள அடையாள அட்டை வழங்கும் முகாம் மாா்ச் 25, 26-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய அட்டை வழங்கவும், ஏற்கெனவே அட்டை வைத்துள்ளவா்களுக்கு அவற்றை புதுப்பித்து வழங்கவும் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து மாா்ச் 25, 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாளையங்கோட்டை பாா்வையற்றோா் மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுகிறது.
பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை ஆகியவற்றின் அசல்-நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து இலவச பேருந்து பயண அட்டை பெறலாம் எனக் கூறியுள்ளாா்.