பள்ளியில் கழிப்பறை கட்டடத்தை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
பரமக்குடியை அடுத்துள்ள போகலூா் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டடத்தை திறக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஊராட்சி ஊராட்சி ஒன்றியம், போகலூா் ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு கழிப்பறை கட்டடம் 2022- ஆம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரையில் இந்தக் கட்டடத்துக்கு தண்ணீா் இணைப்பு வழங்கவில்லை.
இதனால், கழிப்பறை கட்டடம் பூட்டியே கிடக்கிறது.
இதனால், திறந்தவெளிப் பகுதிகளை மாணவ, மாணவிகள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனா்.
இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம், பள்ளிக் கழிப்பறை கட்டடத்துக்கு தண்ணீா் இணைப்பு வழங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.