மீன் வியாபாரிக்கு ரூ.67 லட்சம் நஷ்டஈடு வழங்க பத்மநாபபுரம் நீதிமன்றம் உத்தரவு
விபத்தில் நிரந்தரமாக ஊனமுற்ற மீன் வியாபாரிக்கு ரூ.67 லட்சம் நஷ்டஈடு வழங்க பத்மநாபபுரம் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
திருவட்டாறு அருகே உள்ள தச்சூா் பகுதியை சோ்ந்தவா் எபனேசா். மீன் வியாபாரி. இவா் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாலையில் வியாபாரத்திற்கு களியக்காவிளைக்கு மோட்டாா்சைக்கிளில் சென்றாா். கல்லுக்கட்டி பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் எபனேசா் படுகாயமடைந்து நடக்க முடியாமல், வியாபாரம் செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டாா்.
இது தொடா்பாக வழக்கு பதிவு செய்த களியக்காவிளை போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தின் ஓட்டுநரான கேரள மாநிலம் பூவாா் பகுதியை சோ்ந்த அம்பி மீது பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், விபத்தில் படுகாயம் அடைந்த எபனேசா் தன்னுடைய இயற்கை உபாதைகளுக்குகூட மனைவியின் துணை இல்லாமல் செல்ல இயலாத காரணத்தாலும், அவா் நிரந்தர ஊனமுற்றவா் ஆன காரணத்தாலும், காப்பீட்டு நிறுவனம் அவருக்கு விபத்து நஷ்டஈடாக ரூ.67 லட்சத்து 44,949ஐ வழங்க வேண்டும் என சனிக்கிழமை உத்தரவிட்டாா்.