Railway Exams: தமிழகத் தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம்; ரயில்வே சொல்லும் காரணம் என்ன?
ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் தேர்வு மையங்கள் குறித்து ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "ரயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு முடிந்த அளவிற்குச் சொந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கான கணிப்பொறி சார்ந்த முதல் கட்ட தேர்வு பல காலமுறைகளில் நடைபெற்றது. ஒவ்வொரு காலமுறைக்கும் வேறு வேறு கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டன. தேர்வர்களின் வசதிக்காக இரண்டாம் கட்ட தேர்வு ஒரே காலமுறையில் ஒரே மாதிரியான பொதுவான கேள்வித்தாளுடன் நடத்தப்பட இருக்கிறது.
இதன் காரணமாகத் தேர்வர்களுக்கு முடிந்த அளவிற்குச் சொந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் அருகாமை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மார்ச் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் ரயில்வே பாதுகாப்புப் படை பணிகளுக்கான தேர்வுகள் முடிந்தவுடன் மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உதவி லோகோ பைலட் பணிக்குத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்குச் சொந்த மாநிலத்தில் குறிப்பிட்ட நகரத்தில் உள்ள ஒரே தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே தேர்வாணையத்தில் இரு பதவிகளுக்கும் விண்ணப்பித்த 15,000 விண்ணப்பதாரர்களுக்கு இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான ஒதுக்கீடு இந்தியாவில் உள்ள 21 ரயில்வே தேர்வு ஆணையங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை நடந்த இரண்டாம் கட்ட கணிப்பொறி சார்ந்த தேர்வுகளுக்கும் இதே ஒதுக்கீடு முறைதான் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள வழக்கத்தில் உள்ளபடி பட்டியலின மாணவர்களுக்கு இலவச பயண பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.
ரயில்வே தேர்வு வாரியத்தின் இந்த விளக்கத்தின் மீது மீண்டும் கேள்வி எழுப்பியுள்ள சு.வெங்கடேசன் எம் பி, "இந்தியாவிலேயே அதிக கல்லூரிகள் இருக்கும் தமிழ்நாட்டில் 6,000 பேருக்குத் தேர்வு மையம் அமைக்க முடியவில்லை என ரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல" என்று தெரிவித்துள்ளவர்,
தொடர்ந்து கூறும்போது, "CBT 2 தேர்வு மையங்கள் வெளிமாநிலத்தில் போடப்பட்டு இருப்பது பற்றிய எனது கடிதத்திற்கு ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா யாதவ் அளித்துள்ள பதிலில், 'ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் வேறு ஒரு தேர்வை நடத்தி வேண்டி இருப்பதாலும் CBT 2 தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6,000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியைத் தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா? இப்படி தமிழ்நாடு தேர்வர்கள் வெளிமாநிலங்களுக்குப் பந்தாடப்படுவதை ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன்.
உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வு காணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல. மாணவர்களுக்கான தேர்வுக்கு மையங்களைக் கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்டக் கத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks