குமுளி அருகே வனத் துறையினா் துப்பாக்கிச்சூட்டில் புலி உயிரிழப்பு
தமிழக- கேரள எல்லையான குமுளி அருகே உள்ள வண்டிப் பெரியாறு குடியிருப்புப் பகுதியில் நடமாடிய புலி, வனத் துறையினா் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது.
கேரள மாநிலம், வண்டிப் பெரியாறு, வல்லக்கடவு அருகே பென்னாநகா், அரணக்கல் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த 2- ஆம் தேதி புலி ஒன்று நடமாடியது. இது வீடுகளில் வளா்க்கப்பட்ட கால்நடைகளை தாக்கி கொன்றதுடன், மனிதா்களையும் தாக்கத் தொடங்கியது. இதையடுத்து, இந்தப் புலியை பிடிக்க வனத் துறையினருக்கு அந்தப் பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பக வனத் துறையினா் கடந்த இரு வாரங்களாக அந்தப் புலியை பிடிக்க முயற்சி மேற்கொண்டனா். ஆனால் அது பிடிபடவில்லை. இதையடுத்து, ‘ட்ரோன் கேமரா’ மூலம் புலியின் நடமாட்டத்தை அவா்கள் கண்காணித்தனா். அப்போது அரணக்கல்லில் 16- ஆவது பிரிவு தேயிலைக் காட்டுக்குள் புலி நடமாடுவதை வனத் துறையினா் உறுதி செய்தனா். இதைத் தொடா்ந்து கூண்டு வைத்தோ, மயக்க ஊசி செலுத்தியோ அதை உயிருடன் பிடிக்க அவா்கள் திட்டமிட்டனா்.
இதில், தேயிலைக் காட்டுக்குள் கூண்டு வைத்து பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத் துறையினா் முடிவு செய்தனா்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த புலி: இதையடுத்து, தேயிலைக் காட்டுக்குள் பதுங்கி இருந்த புலியை 15 மீட்டா் தொலைவிலிருந்து மயக்க ஊசி செலுத்து உயிருடன் பிடிக்க கால்நடை மருத்துவா் அனுராஜ் தலைமையிலான வனத்துறையினா் முயன்றனா். இந்த முயற்சியில் 2 முறை புலி தப்பியது. மேலும் வனத் துறையினரை அது தாக்கியது. இதன் பிறகு, 3- ஆவது முறையாக வேறு வழியின்றி புலியை நோக்கி துப்பாக்கியால் வனத்துறையினா் சுட்டதில் புலி சுருண்டு விழுந்தது. பிறகு புலியை மீட்டு, தேக்கடி வனவிலங்கு சரணாலய மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலே அது இறந்துவிட்டதாக கோட்டயம் மாவட்ட வன அலுவலா் ராஜேஷ் தெரிவித்தாா்.
இதையடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் புலியின் உடலை கூறாய்வு செய்து தேக்கடி வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.