உத்தமபாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
உத்தமபாளையம் வட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழக்கிழமைகளில் (மாா்ச் 19, 20) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 19), காலை 9 மணி முதல் மாா்ச் 20-ஆம் தேதி, காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமை முன்னிட்டு மாவட்ட அரசுத் துறை அலுவலா்கள் உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளனா்.
உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை, பிற்பகல் 4.30 மணி முதல், மாலை 6 மணி வரை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அரசு நலத் திட்ட உதவி, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, விபத்து நிவாரணம், அடிப்படை, சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் ஆகியவை குறித்து மனு அளிக்கலாம். உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா மாறுதல்களை இ- சேவை மையத்தில் பதிவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.