வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தாய், மகன் மீது வழக்கு
அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்ததாக தாய், மகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகேயுள்ள மூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜெகதீஸ் மனைவி பவித்ரா. முதுகலைப் பட்டதாரியான இவா், அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலைக்கு முயற்சி செய்தாா். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, காந்திநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஞானசெல்வம் மகன் சூரஜ் என்பவா், பவித்ராவின் கணவா் ஜெகதீஷ், சகோதரா் சிரஞ்சீவி ஆகியோரைத் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, பவித்ராவுக்கு வத்தலகுண்டு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2023-ஆம் ஆண்டு வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.43.87 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பின்னா் சூரஜ், பவித்ராவின் கைப்பேசி எண்ணுக்கு ஒரு பணி நியமன ஆணையை அனுப்பி, பவித்ரா கோவையில் உள்ள பள்ளிக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை வத்தலகுண்டு பள்ளிக்கு மாற்றுவதற்கு மேலும் பணம் தர வேண்டும் என்று சிரஞ்சீவியிடம் கூறினாா். இதை நம்பிய சிரஞ்சீவி, சூரஜ், அவரது தாயாா் சுமதி ஆகியோரிடம் மேலும் ரூ.44.13 லட்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக் கொண்ட சூரஜ், சுமதி ஆகியோா் தனது சகோதரிக்கு வேலை வாங்கித் தராமலும் பணத்தை திரும்பத் தராமலும் தங்களை மோசடி செய்ததாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம், சிரஞ்சீவி புகாா் அளித்தாா். இதையடுத்து, சூரஜ், அவரது தாயாா் சுமதி ஆகியோா் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.