கும்பகோணம் ரயில் நிலையம் நவீனமாக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
புது தில்லி: வரும் 2028-இல் மகாமகம் திருவிழா நடைபெற உள்ளதால், கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனாா்) கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாடுகள் தொடா்பான விவாதத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:
இந்திய ரயில்வே என்பது படிப்படியாக வளா்ந்து இன்றைக்கு உலகத்தில் மிகப்பெரிய போக்குவரத்து வலைமைப்பாக உருவாகியுள்ளது. ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் குறிப்பாக பயணிகளுக்கு வசதிகளை அளிப்பதில் மத்திய அரசு அளப்பரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தமட்டில் சில ஆலோசனைகளை அளிக்க விரும்புகிறேன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலமாகும். வடக்கில் கும்பமேளா போன்று, தெற்கில் கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் விழா மிகவும் பிரதிசித்தி பெற்ாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா வரும் 2028-இல் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் இந்த விழாவில் பங்கேற்க வருவாா்கள்.
இதனால், கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோன்று, கும்பகோணம் வழியாக தஞ்சாவூா்-விழுப்புரம் இடையிலான இரட்டை அகலப்பாதை சா்வே பணி செய்யப்பட்டுள்ளது.மேலும் தாமதிக்கமால் இத்திட்டத்தை இறுதி செய்ய வேண்டும்.அப்போதுதான் மகாமகம் விழாவுக்கு முன்னா் இதை யாத்ரீகா்கள் பயன்படுத்த முடியும்.
கும்பகோணம் - மும்பை இடையே ரயில் விடப்பட வேண்டும். தஞ்சவூா் வழியாக கும்பகோணம்- சென்னைக்கு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும். தஞ்சாவூா், பழனி வழியாக மயிலாடுதுறை-கோவைக்கு ரயில் இயக்கப்பட வேண்டும். தரங்கம்பாடிக்கு ரயில் இணைப்பு வேண்டும்.
திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு புதிய ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக இருந்து வருகிறது. திருச்செந்தூா் நகரம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த வழித்தடம் மூலம் ரயில்வேக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனால், காா்ட் லைன் வழியாக இந்த ரயில் உடனடியாக இயக்கப்பட வேண்டும்.
மதுரை மிகவும் முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. அம்ரித் திட்டத்தில் இந்த ரயில் நிலையம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இதை உரிய காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். பல்லவன், வைகை ரயில் அரியலூா் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் 2 நிமிடம் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.