அடையாறு சீரமைப்பு: `மீண்டும் ரூ.1500 கோடி' - ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி;...
`ஸ்டாலினாலும் வைகோவாலும் நான் இழந்தது நிறைய..!' - கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஓப்பன் டாக்
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்திலிருப்பவர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். ஆனால் இதுவரை எம்.எல்.ஏ., எம்.பி.,என எந்தப் பதவியையும் வகித்ததில்லை. ”வேற ஒருத்தனா இருந்தா இந்நேரத்துக்கு துண்டை உதறித் தோல்ல போட்டுட்டு போயிருப்பான். ஆனா நான் இன்னும் தமிழ்நாட்டு நலனுக்காகவும் உரிமைக்காகவும் இயங்கிட்டுதான் இருக்கேன்’ என்கிறார். காமராஜர், கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், ராம்விலாஸ் பஸ்வான் என பல தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பிலிருந்தவருக்கு இப்போதைய அரசியல் களம் ஏன் செட் ஆக மறுக்கிறது?
அவரை சந்தித்து விரிவாகவே பேசினோம்.
`திமுகவிலிருந்து சஸ்பெண்ட் ஆன நிலையிலிருக்கிறீர்கள். எனவே கேள்வியை அந்தக் கட்சியிலிருந்தே தொடங்கலாம். எப்படி இருக்கிறது இப்போதைய திமுக?”
''செந்தில் பாலாஜி, சேகர் பாபு, கே.கே.எஸ்.ஆர்., ரகுபதி, கண்ணப்பன், செல்வகணபதி, எ.வ.வேலு... ஒருகாலத்தில் அதிமுக முகங்களாக இருந்த இவங்கதான் இப்ப திமுக முன்னணித் தலைகள்.
செந்தில் பாலாஜியை கரூர்ல ஸ்டாலின் பேசிய வீடியோ இப்பவும் சோஷியல் மீடியாவுல ரவுண்டு அடிக்குது. சேகர் பாபு சட்டசபையில் எகிறிக்குதிச்சு திமுககாரங்களை அடிக்க வந்தவர். கே.கே.எஸ்.எஸ்.ஆர் மேல 89-ல கலைஞர் ஆட்சிக் காலத்துலயே கூட்டுறவு நூற்பாலை ஊழல் புகார் சுமத்தினாங்க. இப்படி ஒவ்வொருத்தர் கடந்த காலத்தையும் பேசினா அவ்வளவு பேசலாம். இவங்களைத்தான் நம்புறார் ஸ்டாலின்.
அதனால இப்போதைய திமுக அண்ணா கால திமுகவோ அல்லது கலைஞர் கால திமுகவோ அல்ல. இது ஸ்டாலின் காலக் கட்சி. இப்படிதான் இருக்கும். இதை நினைச்சு சிரிக்கத்தான் என்னால முடியுது. இத்தனைக்கும் கலைஞர் இருந்தப்ப இந்தக் கட்சிக்கு அவ்வளவு உழைச்சிருக்கேன். திமுகவின் சட்ட விதிகள் தமிழ்ல இருந்தது. அதை ஆங்கிலப்படுத்திக் கொடுத்தேன். கலைஞர் கைதானப்ப வீடியோ எடுத்த கேசட்டை போலீஸ்கிட்ட கிடைச்சிடாம பத்திரமா சன் டிவிக்கு கொண்டு போய் சேர்த்தேன்.
கலைஞர் குடும்ப விவகாரத்துல, அப்ப துணை சபாநாயகரா இருந்த என்.கணபதி, என்.வி.என்.சோமு உள்ளிட்டவர்கள் செய்யத் தயங்கிய சட்ட வேலைகளை கலைஞர் கேட்டுகிட்டதுக்காகச் சிறப்பு அனுமதி வாங்கிச் செய்து கொடுத்தேன்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது நான் திமுகவிலேயே இல்லை. ஆனாலும் கலைஞர் கூப்பிட்டுச் சொன்னார்ங்கிறதுக்காக டெசோ மாநாட்டை நடத்தினேன். ஈழத் தமிழர்கள் திமுக மீது கடுங்கோபத்துல இருந்தப்ப ஐ.நா சபையிலயும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துலயும் ஸ்டாலினைப் பேச வச்சு அந்தக் கோபம் தணியக் காரணமா இருந்தேன்.
அதேநேரம் கலைஞர் இருந்த வரை என்னிடம் நல்லவிதமாகவே அன்பு காட்டினார். அவர் மறைவுக்குப் பிறகு ஏன் தெரியலை ஸ்டாலினுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்னைப் பிடிக்கலை. எனக்கு எந்தப் பதவியும் கிடைக்காதபடி பார்த்துகிட்டார். 2011ல் கோவில்பட்டி சட்டசபைத் தொகுதி எனக்குக் கிடைக்கிற மாதிரி இருந்தது. அப்படிக் கிடைக்கக்கூடாதுன்னு மறைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியும் கே.கே.எஸ்.எஸ். ஆரும் காய் நகர்த்த, அவங்க பேச்சைக் கேட்டு தொகுதியை அந்த ஊர்ல அமைப்பே, ஏன் கொடிக்கம்பமே இல்லாத பா.ம.க.வுக்கு ஒதுக்கினார்னா பாருங்க. இது ஒரு சாம்பிள்தான்.
ஸ்டாலினால் இழந்தது இன்னும் இருக்கு. இப்ப கடைசியில கட்சியை விட்டு நீக்கியிருக்காங்க. 'திமுகவுல ஒரு வட்டச் செயலாளருக்குத் தெரிஞ்சது கூட ஸ்டாலினுக்குத் தெரியாது'னு வைகோ முன்னாடி சொல்லியிருக்கார். அதுதான் நிஜம். இப்ப பணத்தின் குறியீடு தொடர்பா புதுசா ஒரு சர்ச்சைக்கு வழி வகுத்திருக்காரே, அந்தக் குறியீடு திமுகவுடன் தோழமையா இருக்கிற காங்கிரஸ் ஆட்சியில அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவனால் உருவாக்கப் பட்டதுதான். ஏன் எதிர்க்கணும், யாரை எதிர்க்கணும்னெல்லாம் எதுவுமே தெரியாம எதையாவது பண்ணிட்டிருக்கார். என்ன சொல்றது? என்னைப் பொறுத்தவரை கட்சியில இருந்து விளக்கம் கேட்காமலே நீக்கினதால ஒண்ணும் பிரச்னை இல்லை. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். ஊழல் எதுவும் செய்யலை. அதனால் ரெய்டு பயமெல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கேன்''
``மதிமுக உதயமானதில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. மதிமுகவின் இப்போதைய நிலை குறித்தம் பேசலாமா?”
''அன்னைக்கு அவர் வைகோ இல்லை. வை.கோபால்சாமி. எனக்கு பக்கத்து ஊர்க்காரரும் கூட. திமுக தலைமைக்கு அவர் வளர்ச்சி பிடிக்கல. அவர் கலந்துகிடற கூட்டங்கள்ல சாப்பாட்டு நேரத்துல அவரைப் பேச வைச்சாங்க. அப்பதான் கூட்டம் சீக்கிரம் கலையும்னு. திட்டம் போட்டே வெளியேத்தினாங்க. மாவட்டச் செயலாளர்கள் பலர் அவர் பின்னாடி வந்தாங்க. இளவட்டப் பசங்க அவரை வெளியேத்தினதைக் கண்டிச்சு தீக்குளிச்சாங்க.
தேர்தல் ஆணையத்திடம் 'உண்மையான திமுக நாங்கதான்'னு க்ளைம் செய்தோம். அப்ப டி.என்.சேஷன் இருந்தார். அவர் கலைஞர் தலைமையிலானதுதான் திமுகனு சொல்லிட்டார். மதிமுக உதயமாச்சு. 1996 தேர்தல் வந்தது. விளாத்திகுளத்துல அவரும் கோவில்பட்டியில நானும் போட்டியிட்டோம். அந்த தேர்தல்ல ஒரு பெரிய எழுச்சி இருக்கும்கிற எதிர்பார்ப்பு இருந்திச்சு. வைகோவை மாற்று சக்தியா உருவெடுப்பார்னு நாங்கெல்லாம் ரொம்பவே எதிர்பார்த்தோம்.
ஆனா முன்னாடி ஆட்சியில இருந்த ஜெயலலிதா செய்த ஊழல்கள்ல மக்கள் வெறுப்புல இருந்ததைக் கண்டுக்காம காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர, மூப்பனார் த.மா.கா.வை உருவாக்கி கலைஞர் கூட வந்துட்டார். ஜெயலலிதா எதிர்ப்பு அலையோட நடிகர் ரஜினிகாந்தும் சும்மா இருக்காம வாய்ஸ் கொடுக்கிறேனு வந்துட்டார். அதனால ரிசல்ட் நாங்க எதிர்பார்த்ததுக்கு நேரெதிர். வைகோ, நான், இன்னும் ரெண்டு மூணு பேர்தான் டெபாசிட்டே வாங்கினோம். முதல் கோணல் முற்றும் கோணலாயிடுச்சு.
பிறகு அவர் எடுத்த பல முடிவுகள் கட்சிக்கு கேடாத்தான் முடிஞ்சது. செய்ய வேண்டியதைச் செய்யாம... செய்யக் கூடாததைச் செஞ்சார். கூட்டணி விவகாரத்துல அவர் எடுத்த பல முடிவுகள் கட்சியைக் காலி பண்ணிடுச்சு. என் இளமை, பொருள் எல்லாமே மதிமுகவுக்குச் செலவாகி விரயமானதுதான் மிச்சம். அவர் கட்சிக்கு உழைச்ச நேரத்துல என் வழக்கறிஞர் வேலையில கவனம் செலுத்தியிருந்தா இப்ப சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆனாலும் ஆகியிருப்பேன். ஐ.நா. சபை வேலை ஒண்ணு கிடைச்சப்பவும் அங்க நான் போகாததுக்கு வைகோதான் காரணம். அவராலும் நான் இழந்தது நிறைய’’.

``விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர் நீங்க. சீமான் இன்றைய அரசியலை எப்படிப் பார்க்குறீங்க?”
''விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் அதன் தலைவருடனும் எனக்கிருந்த தொடர்பு, அவங்களுக்காக வழக்காடுமன்றத்தில் நான் வாதாடினது எல்லாம் ஊரறிஞ்ச விஷயம். அவங்க யார் மீது மரியாதை வச்சிருந்தாங்க யார் மேல கோபமா இருந்தாங்கன்றதெல்லாம் சம்பந்தப் பட்டவங்க மனசாட்சிக்குத் தெரியும். இன்னைக்கு உரக்கப் பேசினா எல்லாமே உண்மையாகிடும்னு சிலர் நினைக்கிறாங்க. பொய் ஒருபோதும் உண்மை ஆகாது''
``த.வெ.க. வை வரவேற்றுக் கூடப் பேசியிருந்தீங்களே...”
''வைகோ வந்த போது மாற்று சக்தின்னு எப்படி நம்பினேனோ அதேபோன்றதொரு நம்பிக்கையைத்தான் இப்ப தம்பி விஜய் கிட்டயும் எதிர்பார்க்குறேன். இதுக்கு முன்னாடி விஜய்காந்த் கட்சி தொடங்கினப்பக் கூட எதிர்பார்த்தேன். கட்சியைப் பதிவு செய்யறது தொடர்பான வேலைகள்ல அவருக்கு சில உதவிகளைக் கூடப் பண்ணினேன் இப்ப விஜய் மீது நம்பிக்கை தெரியுது. அதைத்தான் சொல்லியிருந்தேன். அதுக்காக அந்தக் கட்சியில போய் நான் சேரப்போறேன்னு அர்த்தமில்லை''

``பதவிகள் எதுவும் இல்லாம தொடர்ந்து இயங்கி வர்றது மனச் சோர்வைத் தரவில்லையா?”
''அரசியல்ல இப்ப தகுதியே தடைனு ஆகிடுச்சு. இன்னைக்கு டவாலி வேலை செய்யத் தயாரா இருந்தா மட்டுமே அரசியல்ல நிலைக்க முடியுது. என்னால அது முடியாது. தலைமைக்கு மரியாதை தரலாம். அதேநேரம் சுயமரியாதை, தன்மானமெல்லாம் முக்கியமில்லையா? அதனால பதவிக்காக வருத்தப்பட்டுட்டு இருந்தா என்ன நடந்திடப் போகுது. அதனால் என் பணிகளை நான் எந்தவித சோர்வுமின்றிச் செய்துட்டேதான் இருக்கேன்.
1976ல் விவசாயிகளுக்கு எதிரா ஜப்தி நடவடிக்கை எடுக்கக் கூடாதுங்கிற நீதிமன்றத் தீர்ப்பு நான் வாங்கினதுதான். விவசாயிகள் பிரச்னைக்காக நாராயணசாமி நாயுடு காலத்துல இருந்து தொடர்ந்து குரல் கொடுத்துட்டு வர்றேன். தேசிய நதிநீர் இணைப்புக்காக குரல் கொடுத்துட்டு வர்றேன். கண்ணகி கோவில், முல்லைப் பெரியாறு விவகாரங்கள்ல் தமிழ்நாட்டு உரிமைகள் மீட்கப்பட வழக்காடியிருக்கேன். நிறைய பொதுநல வழக்குகள் போட்டிருக்கேன். இன்னமும் தொடர்ந்து இதேபோல இயங்கிட்டேதான் இருக்கப் போறேன்'' என்கிறார் அதே உறுதியுடன்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks