மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணைய...
சென்னை: `உனக்கு உன் மனைவி செய்வினை வைத்திருக்கிறாள்' - டெலிவரி ஊழியரை ஏமாற்றிய பெண்
சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அக்பர் (33). இவர் சிக்கன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்தச் சூழலில் அக்பர் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். அதனால் திருமங்கலம் பகுதியில் குறி சொல்லும் பெண்ணிடம் தன்னுடைய எதிர்காலம் குறித்து ஜோதிடம் பார்த்திருக்கிறார் அக்பர். அப்போது அந்தப் பெண், `உன்னுடைய மனைவி உனக்கு செய்வினை வைத்திருக்கிறார். அதற்கு பரிகாரம் செய்தால் மட்டுமே நீ வாழ்க்கையில் முன்னேற முடியும்' என கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அக்பர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இதையடுத்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என அந்தப் பெண்ணிடம் அக்பர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், சில பரிகார பூஜைகள செய்ய வேண்டும் என கூறி 40,000 ரூபாய் வரை செலவாகும் என கூறியிருக்கிறார். அதனால் அந்தப் பெண் கேட்ட பணத்தை அக்பர் கொடுத்திருக்கிறார். அதோடு வீட்டில் உள்ள தங்கம், வெள்ளி நகைகளில் தோஷம் இருக்கிறது. அதற்கும் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என அந்தப் பெண் கூறியிருக்கிறார். அதனால் அக்பரும் வீட்டிலிருந்த ஒன்றரை சவரன் எடையுள்ள இரண்டு மோதிரங்கள், ஒரு ஜோடி கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவற்றை ஒரு டப்பாவில் வைத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து டப்பாவை வைத்து சில மந்திரம் பூஜைகளை செய்த அந்தப் பெண், `நான் சொல்லும் வரை இதை திறந்து பார்க்கக் கூடாது, மீறினால் பரிகாரம் பூஜை பயனளிக்காது' என்று கூறி டப்பாவை அக்பரிடம் கொடுத்திருக்கிறார். அதன்படி அக்பரும் டப்பாவை திறக்கவில்லை. அதோடு குறி சொல்லும் அந்தப் பெண்ணும் திருமங்கலம் பகுதியில் வழக்கமாக இருக்கும் இடத்துக்கு வரவில்லை. அதனால் நகை டப்பாவை அக்பர் திறந்து பார்த்தபோது அதில் நகை, வெள்ளி கொலுசு என எதுவும் இல்லை. அதே நேரத்தில் கற்கள் இருந்திருக்கின்றன. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அக்பர், திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அக்பரை ஏமாற்றியது செங்குன்றத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (46) எனத் தெரியவந்தது. இவர் செய்வினை, பரிகார பூஜை எனக் கூறி அக்பரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் விஜயலட்சுமியிடமிருந்து 25,000 ரூபாய், இரண்டு மோதிரங்கள், ஒரு ஜோடி கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு விஜயலட்சுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.