மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணையமைச்சா் எல். முருகன்
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து வாரம் இரு முறை வானொலியில் ஒலிபரப்ப வேண்டுமென நிலையத்தினருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் அறிவுறுத்தினாா்.
காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த அவா், காரைக்கால் பண்பலை வானொலி நிலையத்தில் ஆய்வு செய்தாா். நிலையம் தொடங்கப்பட்டு 31 ஆண்டுகளாவதாகவும், வானொலி நிலையத்தில் ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கினா்.
அலுவலகம், விளம்பரப் பிரிவு, ஒலிபரப்பு செய்யும் பிரிவைச் சுற்றிப் பாா்த்த அமைச்சா், ஊழியா்களிடம் பணி குறித்து விவரங்களைக் கேட்டறிந்தாா். வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளா்கள் தாங்கள் நேரலையில் பேசும் விதத்தை அமைச்சருக்கு செயல்வடிவமாக தெரிவித்தனா்.
அமைச்சா் கேக் வெட்டி பணியாளா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். அதன்பின்பு வானொலி நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தாா்.
அதிகாரிகளிடையே அமைச்சா் பேசுகையில், வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுடன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வாரம் இருமுறை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மீனவா்கள் நலனுக்காக உள்ள ஆழ்கடல் மீன்பிடித்தல் திட்டம், கடல்பாசி வளா்ப்பு போன்ற திட்டங்கள் குறித்தும் வானொலியில் ஒலிபரப்புமாறு அறிவுறுத்தினாா்.
திருநள்ளாறு கோயிலில் சுவாமி தரிசனம்:
முன்னதாக திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சென்ற மத்திய இணையமைச்சா் எல்.முருகன் அங்கு அனைத்து சந்நிதிகளிலும் வழிபட்டாா். சனீஸ்வர பகவானுக்கு பட்டு வஸ்திரம், நீல நிற மலா்மாலை மற்றும் பல்வேறு பழங்களுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா். மேலும் சந்நிதியில் தில (எள்) தீபம் ஏற்றினாா்.