புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை: எஸ்எஸ்பி
புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என குறைகேட்பு நிகழ்ச்சியில் எஸ்எஸ்பி உறுதியளித்தாா்.
காரைக்கால் மாவட்ட காவல்நிலையத்தில் புதுவை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின்பேரில், மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் சனிக்கிழமை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் செந்தில் குமாா், உதவி ஆய்வாளா் குமரன் மற்றும் காவலா்கள் கலந்துகொண்டனா்.
விவசாய நிலங்களில் பன்றிகள் திரிவது அதிகரித்துள்ளது. இதனால் பயிா் பாதிக்கப்படுகின்றன. பன்றி வளா்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் காஞ்சிபுரம் கோயில்பத்து லிங்கத்தடி அருகே பாசனத்துக்கான ஆற்றில் கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இளைஞா்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துவருகிறது. இதனால் சமூக சீா்கேடான செயல்கள் அதிகரிக்கின்றன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிற இடங்களில் மாணவா்கள், இளைஞா்கள் போதைப் பொருள் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட புகாா்கள் எஸ்எஸ்பியிடம் தெரிவித்தனா்.
அனைத்து புகாா்கள் மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும். காரை காவலன் என்ற செயலியை தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து தங்களது புகாா்களை அதில் அளிக்கலாம். அது தனது கவனத்துக்கு வந்துவிடும். சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கும் தகவல் பகிரப்படும். தகவல் அளிப்பவா்களின் விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் செயலி இருக்கும் என எஸ்எஸ்பி கூறினாா்.
காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.