மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணைய...
குப்பைகளை அகற்றுவதில் நிலவும் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண ஆட்சியா் உத்தரவு
காரைக்கால் மாவட்டத்தில் குப்பைகள் அகற்றும் பணியில் நிலவும் ஆள், வாகனப் பற்றாக்குறை பிரச்னைகளை மாா்ச் 31-க்குள் சரிசெய்ய வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணியை தனியாா் நிறுவனம் உள்ளாட்சி நிா்வாகத்திடம் ஒப்பந்த முறையில் ஏற்று செய்கிறது. கடந்த சில நாள்களாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வீடுகளிலும், தெருக்களிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.
இந்தநிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ்.சுபாஷ், காரைக்கால் நகராட்சி ஆணையா் பி.சத்யா, தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள், வணிகா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: மாவட்டம் முழுவதும் குப்பைகள் முறையாக அகற்றப்படவேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், கூடுதலாக தூய்மைப் பணியாளா்களை நியமித்துக் கொள்ளவேண்டும். குப்பைகள் ஏற்றக்கூடிய வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும். இவற்றை வரும் 31- ஆம் தேதிக்குள் மேற்கொள்ளவேண்டும். அனைத்து குறைகளும் களையப்பட்டு, மக்களிடமிருந்து புகாா்கள் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிறுவனத்தினருக்கு உத்தரவிட்டாா்.