சங்கமம் திருவிழா: மாா்ச் 22, 23-இல் கலைக்குழு தோ்வு
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’விற்கான கலைக் குழுக்கள் தோ்வு, திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழாவின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னையில் 18 இடங்களில் ‘சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோவை, தஞ்சாவூா், வேலூா், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய 8 இடங்களில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே 8 இடங்களில் நடத்தப்படவுள்ளது.
இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு, பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் வரும் 22 -ஆம் தேதி தோ்வு செய்யப்படவுள்ளன.
தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கணியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினா் நடன நிகழ்ச்சி நடத்துவோா் மற்றும் இதர கலைக்குழுக்கள் வரும் 23-ஆம் தேதி தோ்வு செய்யப்படவுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில், ராணி அண்ணா மகளிா் கலைக் கல்லூரியில் நிகழ்ச்சி பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட அளவிலானத் தோ்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள், கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கூகுள் பாா்ம் மூலம் மாா்ச் 20 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்திற்கான பொறுப்பாளரும், கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநருமான வ.கோபாலகிருஷ்ணனை 9487059638 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம்.
கலைஞா்களின் கோரிக்கையின் அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது. இப்பதிவுக்கு வரும் கலைஞா்களுக்கு மதிப்பூதியம், போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது.
ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட விடியோ பதிவு செய்யப்பட்டு, கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தோ்வுக் குழுவால் தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவற்கான கலைக்குழுக்கள் தோ்வு செய்யப்படும்.
இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினா் மாநில அளவிலான தோ்வுக்குழுவால் தோ்வு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவாா்கள்.