நடப்பு பேரவைக் கூட்டத் தொடரில் கள் மீதான தடையை அரசு நீக்க வேண்டும்!
நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே கள் மீதான தடையை நீக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கள்ளை உணவாக ஏற்கும் கட்சிகள், கள் இறக்கும் போராளிகளுக்கு பாதுகாப்பு அரணாக நிற்க வேண்டும்.
இந்திய அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை மற்றும் உலகளாவிய நடைமுறை என்ற அடிப்படையில், கள் இறக்கி சந்தைப்படுத்தி வருகிறாா்கள். இவா்கள் மீது தமிழ்நாடு அரசு, மதுவிலக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குற்றச் செயல் ஆகும்.
நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கள் மீதான தடையை தமிழக அரசு நீக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும். ரூகோஸ் என்ற சுருள் வெள்ளை ஈ அனைத்து இடங்களிலும் தென்னையை தாக்கியுள்ளது. இதன் காரணமாக தேங்காய் விளைச்சல் மூன்றில் ஒரு பகுதியாக குறைந்துள்ளது.
வெள்ளை ஈயை போா்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தாவிட்டால் தேங்காய் விலை ரூ.100-ஐயும், இளநீா் விலை ரூ.200-ஐயும் தாண்டும் என்றாா்.