பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!
Chennai: ரூ.2,000 மாதக் கட்டணம்; ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கலாம்..!
இப்பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணிக்கிறார்கள். அலுவலகம் செல்வோருக்கு வசதியாக இருவழி பயண அட்டை, விருப்பம்போல் பயணிக்க மாதாந்திர பயண அட்டை என பல்வேறு சலுகை கட்டணங்களை மாநகர் போக்குவரத்து கழகம் இதுவரையில் வழங்கி வருகிறது. இதில் மாதம்தோறும் ரூ.1,000 கட்டணமாக செலுத்தி பெறப்படும் பயணச் சலுகை அட்டை மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர்த்து, சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, சிற்றுந்து ஆகியவற்றில் பயணிகள் விருப்பம்போல் பயணிக்கலாம்.
இந்த நிலையில், பயணிகளுக்கு மேலும் ஒரு சலுகையாக ரூபாய் 2000 -க்கு புதிய பயண சலுகை கட்டண அட்டையை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த புதிய சலுகை கட்டண அட்டை மூலம் குளிர்சாதனப் பேருந்துகளிலும் பயணிகள் விருப்பம் போல் பயணம் செய்யும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த அட்டையைப் பெறுபவர்கள் மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் , குளிர்சாதன பேருந்து, சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, சிற்றுந்து ஆகியவற்றில் பயணிகள் விருப்பம்போல் பயணிக்கலாம்.
தற்போது கோடை காலம் துவங்குவதால் வெப்பம் தணிக்க பலரும் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஏசி பேருந்து உள்பட அனைத்து வகை பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கும் வகையில் ரூ.2,000 கட்டணம் கொண்ட பயண அட்டையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது திருப்போரூர், சிறுசேரி டெக் பார்க், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்துகள் வந்ததும், தேவைக்கேற்ப பல்வேறு வழித்தடங்களிலும் இயக்க திட்டமிட்டுள்ள மாநகர் போக்குவரத்து கழகம் அதற்காக 225 ஏசி பேருந்துகள் உட்பட 650 மின்சார பேருந்துகளை விரைவில் கொள்முதல் செய்ய உள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் ரூ.2,000 பயண அட்டை திட்டம் பயணிகளிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், ஏற்கனவே உள்ள ரூ.1000-க்கான பயண அட்டையில் கை வைக்காமல் இருந்தால் சரி என்ற கவலையும் கூடவே இருப்பதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது .