Tasmac: `ரூ.1000 கோடி முறைகேடு' ED குற்றச்சாட்டு... அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?
டாஸ்மாக் நிர்வாகத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மார்ச் 6-ம் தேதியிலிருந்து 3 நாள்கள் சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பார் உரிமங்கள் வழங்குதல், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், டெண்டர் விடுதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மதுபானம் பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் அதிகமாக விற்கப்படுவதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள், மதுபான நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டாஸ்மாக் மூலம் அரசு கணக்கில் சேராமல் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி விளக்கம்:
அமலாக்கத்துறை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், "எந்தவித முகாந்தரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட ரைடு எந்த ஆண்டு பதியப்பட்ட, எந்த முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறவில்லை.
பணியிட மாற்றங்கள் குடும்ப சூழ்நிலைகள், மருத்துவ காரணங்கள் போன்றவற்றால் டாஸ்மாக் நிறுவனத்தால் வழங்கப்படுபவை, அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் ஏதோ தவறு நடந்ததுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றனர்.
ட்ரான்ஸ்போர்ட்டுக்கான டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் கொடுக்கப்பட்டது. அதில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமில்லை. ஆனால் ட்ரான்ஸ்போர்ட் தொடர்பான ஆவணங்கள் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மதுபான உற்பத்தி ஆலைகளுக்கும், பாட்டில் கொள்முதலுக்கும் இடையில் இருக்கும் வணிகம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வெளியில் நடந்தது.
கடந்த 4 ஆண்டிகளில் பார் டெண்டர் முழுவதும் ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட்டிருக்கிறது.
அவர்கள் பொதுவாக சொல்லியிருக்கும் 1000 கோடி முறைகேடு என்பது எந்த முகாந்திரமும் இல்லாமல் பொத்தாம்பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.

நான் ஒன்றை சுட்டிக்காட்டுகிறேன், முன்னாத ஒருவர் பேட்டியில் ரூ.1000 கோடி முறைகேடு என்கிறார், பின்னர் அமலாக்கத்துறை ரூ.1000 கோடி என பதிவிட்டு அறிக்கை விடுகின்றனர். இதில் 1000 அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது. இது மக்களுக்கு நன்றாக தெரியும். அமலாக்கத்துறையில் சோதனைகளை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது." எனக் கூறியுள்ளார்.